ஒரே வாசல், ஒரே கோயில்; தெய்வங்கள் மட்டும் வேறு வேறு - அனைத்து மதமும் ஒன்றாக வழிபாடு செய்யும் கோயில் தெரியுமா?

First Published Apr 28, 2017, 9:40 AM IST
Highlights
hindu muslims pray in same place


ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகரம் என்றாலே, எருமை மாடு வாங்கிச் சென்ற விவசாயியை பசு பாதுகாவலர்கள் அடித்துக் கொன்ற சம்பவம்தான் நினைவுக்கு வரும்.

ஆனால், அங்கு மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக அங்கு ஒரு இடம் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. அல்வார் மாவட்டத்தில் உள்ள மோதி டோங்கிரிமலைப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் ஒருபுறம் இந்துக்கள் வழிபாடு நடத்தும் அனுமன்சன்னதியும், மறுபுறம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் சயத்தர்பார் தர்ஹாவும் உள்ளது.

இந்த இரு வழிபாட்டு தலங்களையும் பிரிக்க சுவர்கள் ஏதும் இல்லை.  ஒரே நுழைவாயிலில் வரும் முஸ்லிம்களும், இந்துக்களும் ஒற்றுமையாக வழிபாடு நடத்திச் செல்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஒருபுறம் தர்ஹாவில் இருந்து சாம்பிராணிப் புகையும், அத்தர் மணமும் கமழ்கிறது. பச்சை நிற கொடியும் , தலையில் குல்லாருடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துகிறார்கள்.

மறுபுறம் காவிநிறக் கொடி பறக்க, நெய்மணத்துடன் தீபாராதனை காட்டப்பட்டு, இந்துக்கள் நெற்றியில் செந்தூரத்திலகத்துடன் அனுமனை வழிபாடு செய்கிறார்கள்.

இங்குள்ள இரு கோயிலுக்கும் பயன்படுத்தும் பொருட்கள் கூட வேறுவேறு இல்லை. ஆஞ்சநேயர் கோயிலில் பயன்படுத்திய ஒலிபெருக்கிகள், மத்தளங்கள், டோலக்குகள், ஹார்மேனியங்கள்அனைத்தும், பூஜை முடிந்தவுடன், தர்ஹாவில் பயன்படுத்தப்படுகிறது 

அனுமன் கோயிலையும், தர்ஹாவையும், சுத்தப்படுத்தும் துடைப்பங்கள், பொருட்கள் அனைத்தும் கூட ஒன்றுதான்.

இந்த இரு வழிபாட்டு தலங்களையும் பராமரித்து வரும் மஹந்த் நவால் பாபா(வயது51) கூறுகையில், “  இரு வழிபாட்டு தலங்களுக்கும் ஒரே நுழைவாயில்தான், இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாகத்தான் வருகிறார்கள், வழிபாடு செய்கிறார்கள். இதில் என்ன பிரச்சனை இருக்கப்போகிறது?’’ என்றார்.

முதல்முறையாக இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள் ஒன்றாக சாமி தரிசனம் செய்வதை பார்த்து வியப்படைகிறார்கள். மதநல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த கோயில் விளங்கி வருகிறது உண்மையில் சிறப்பானதுதான்.

ஒரே கோயிலுக்குள் இரு வேறு மதங்களின் கடவுள்களும் ஒன்றாக சேர்ந்து விட்டார்கள். ஆனால், இரு வேறு மதங்களைச் சேர்ந்த மனிதர்கள் எப்போது ஒன்றாக இணைவார்கள்?

click me!