ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட காரணம் என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு!!

By Narendran SFirst Published Sep 3, 2022, 12:22 AM IST
Highlights

ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக தனது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கான காரணத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. 

ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக தனது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கான காரணத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு. ஆசிரியர் பணி என்பது கல்வியை மட்டும் கற்றுக்கொடுப்பது அல்ல.  ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு விளக்கி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் ஒரு மகத்தான பணி. அப்படிப்பட்ட பணியை மாணவர்களுக்கு அளிக்க, அந்த ஆசிரியர் கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருந்தால் மட்டுமே முடியும். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதியை  ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். ராதாகிருஷ்ணன், 1888 ஆம் ஆண்டு செப்.5 ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி.ஏ.பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம்.ஏ.பட்டமும் பெற்றார். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார். 1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட அவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அற்புதப் படைப்பான இந்திய தத்துவம வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது. இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார்.

இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி டாக்டர் ராதாகிருஷ்ணன். 1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணனை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது. 1952 ஆம் ஆண்டு இந்திய குடியரசின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1962 முதல் 1967 வரை இந்திய குடியரசு தலைவராக  பதவியேற்றார். ஒரு நல்ல ஆசிரியராகவும், மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5 இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக தனது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டியவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இந்த நாளில் பள்ளிகள், கல்லூரிகள் இந்தியா முழுவதும் ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது. 

click me!