ராஜஸ்தான் கனமழைக்கு இது வரை 12 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை, மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் கனமழை காரணமாக 12 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் உயிர் இழப்பு மற்றும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலைய பகுதியில் மணிக்கு 96 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது.
அடுத்து வரு 24 மணிநேரத்தில், கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாநிலத்தின் பல இடங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
டோங்க் மாவட்ட ஆட்சியர் சின்மயி கோபால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைபாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒரு சில பகுதிகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதில் சிக்கல்கள் இருப்பதாகவும், சேவைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புயல் மற்றும் அதைத் தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட மொத்த இழப்பை மதிப்பிடும் பணியில் களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களின் அறிக்கை கிடைத்தவுடன் தகுதியானவர்கள் அரசாங்க விதிமுறைகளின் கீழ் இழப்பீடு வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.