மீண்டும் பேய் மழையின் கோரப்பிடியில் கேரளா ! பலி எண்ணிக்கை 102 ஆக உயர்வு !!

By Selvanayagam PFirst Published Aug 15, 2019, 7:26 AM IST
Highlights

கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் சற்று ஓய்ந்திருந்த மழை இன்று மீண்டும் மழை கொட்டத் தொடங்கியுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை , 102 ஆக உயர்ந்துள்ளது. 
 

கேரளாவின் வடக்கு பகுதியில் உள்ள, மலப்புரம், கண்ணுார் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு, அதிதீவிர மழை பெய்யும் என்பதற்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்தது. 

அதுபோலவே, நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை, அங்கு பலத்த மழை பெய்தது. இதனால், ஏற்கனவே பெருகி ஓடிய ஆறுகள், கால்வாய்களில் மேலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை, அங்கு மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

மழை நின்றால் தான், நிலச்சரிவில் சிக்கியவர்கள், மண் குவியலில் இறந்து கிடப்பவர்களை மீட்க முடியும் என, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தோர் தெரிவித்தனர். 


குறிப்பாக, பலத்த மழையால், நிலச்சரிவு ஏற்பட்ட, கவலப்பாரா வன கிராமத்தில், நேற்றும், மீட்புப் பணி தொடர முடியாத நிலை காணப்பட்டது. மண் மூடிய வீடுகளில் இறந்து கிடப்பவர்களை, மீட்க முடியாத அளவுக்கு, மழை பெய்தது.

பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்றும் பார்வையிட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர், பினராயி விஜயன், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும், தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

மேலும், பலியானவர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய், வீடுகளை இழந்தோருக்கு, 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், அறிவித்தார். நேற்று மாலை நிலவரப்படி, அந்த மாநிலத்தில், மழை, வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை, 102 ஆக உயர்ந்துள்ளது; இரண்டு லட்சம் பேர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

click me!