தண்ணீரில் தத்தளிக்கும் கேரளா !! பேய் மழை…பயங்கர காற்று… கடும் நிலச்சரிவு… கரைபுரண்டோடும் வெள்ளம்… சின்னா பின்னமான 4 மாவட்டங்கள் …

First Published Aug 10, 2018, 10:23 AM IST
Highlights

தண்ணீரில் தத்தளிக்கும் கேரளா !! பேய் மழை…பயங்கர காற்று… கடும் நிலச்சரிவு… கரைபுரண்டோடும் வெள்ளம்… சின்னா பின்னமான 4 மாவட்டங்கள் …

தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட ஒரு வாரம் முன்கூட்டியே கேரளாவில்  பெய்யத் தொடங்கியது. கடந்த மாதம் தொடர்நது பெய்த மழையால் கேரளாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.

கேரள மக்களும் தென் மேற்கு பருவமழையை  ரசித்து அனுபவித்து வந்தனர். அதை தங்களது வரமாகவே கருதி மகிழ்ந்தனர். இதையடுத்து தென் மேற்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்தது.

இந்நிலையில் தற்போது கேரளாவில் தென் மேற்கு பருவமழை மீண்டும் மிரட்டத் தொடங்கியுள்ளது. இந்த முறை மழை சற்று உக்கிரமாக பெய்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, கடும் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது பெரியாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்து விட்டன. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது.

இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாலும், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணை 26 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.

பலத்த மழையாலும், வெள்ளத்தாலும் கடுமையான  நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மீட்பு பணிக்கு துணை ராணுவம் வந்துள்ளது. நேற்று மாலை பெங்களூருவில் இருந்து துணை ராணுவத்தினர் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் சென்னையில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை சேர்ந்த 45 பேர் கேரளா சென்றனர். அவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில்,தொடர் மழை பெய்து வருவதால் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது

click me!