
டெல்லி, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுவதல், சாலைப் போக்குவரத்து, விமானம் மற்றும் ரயில் சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதோடு, கடும் குளிர் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களில் கடந்த ஒரு மாதகாலமாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது.இதனால், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சாலைகளில், எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத காரணத்தாலும் போக்குவரத்து நெரிசலாலும் விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர்.
டெல்லியில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். 50 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க முடியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 8 வெளிநாட்டு விமானங்கள் மற்றும் 7 உள்நாட்டு விமானங்கள் தாமதாக புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக வெளியூர் செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள், ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து அவதியுற்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம் காரணமாக இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அலகாபாத்தில் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
இதேபோல் பஞ்சாப் மாநிலம் அமிர்தரசிலும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. வட மாநிலங்களில் வரும் நாட்களில் பனிமூட்டம் அதிகரிக்ககூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மந்தமாகியுள்ளன.