வெளிநாட்டிலிருந்து வந்து மாஸ்க் போடாமல் ஜாலியாக சுற்றிய நபர்..! அலேக்கா தூக்கி ஆம்புலன்ஸில் அனுப்பிய போலீஸ்

By karthikeyan VFirst Published Jul 6, 2020, 7:57 PM IST
Highlights

வெளிநாட்டிலிருந்து வந்து, வீட்டில் தனிமைப்படாமல், பொதுவெளியில் சுற்றிய நபரை போலீஸார் விரட்டிப்பிடித்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 
 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துவிட்ட நிலையில், ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி உலகளவில் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது இந்தியா. 

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களில் தான் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது. மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்ட கேரளாவில் இதுவரை 5429 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள அரசின் சிறப்பான நடவடிக்கைகளாலும் மக்களின் ஆதரவாலும் கேரளாவில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது. 

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலுமே, கொரோனா குறித்த விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் இல்லாத சிலர் அலட்சியமாக செயல்படுகின்றனர். அந்தவகையில், கேரளாவில் அப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவிற்கு கடந்த 3 தினங்களுக்கு முன், சவுதியிலிருந்து ஒரு நபர் வந்திருக்கிறார். பத்தினந்திட்டாவிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது அந்த நபரின் ஊர். வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதால் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார அந்த நபர். 

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவரது ஊரிலிருந்து பத்தினம்திட்டா வரை 10 கிமீ தடையை மீறி பைக்கில் வந்துள்ளார். மாஸ்க்கும் போடாமல், அலட்சியமாக பைக்கில் 10 கிமீ வந்த அவரை, பத்தினம்திட்டாவில் போலீஸார் நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது இந்த தகவல்களையெல்லாம் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் போலீஸாருக்கு ஒத்துழைப்புகொடுக்கவும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் மறுத்துள்ளார். 

இதையடுத்து அங்கு சுகாதாரத்துறை ஊழியர்களும் ஆம்புலன்ஸும் வரவழைக்கப்பட்டது. அந்த நபர் ஒத்துழைப்பு கொடுக்காமல் தப்பியோட முயன்றார். அவரை போலீஸாரும் சுகாதாரத்துறை ஊழியர்களும் இணைந்து பிடித்து ஸ்ட்ரெச்சரில் வைத்து கட்டி ஆம்புலன்ஸ் மூலம் கோழெஞ்செரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். 

click me!