
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ஹரியானாவில் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரத்தில் இப்பகுதியில் பதிவாகும் இரண்டாவது உளவு வழக்கு இதுவாகும்.
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள கல்சா கல்லூரியில் அரசியல் அறிவியல் முதலாம் ஆண்டு முதுகலை படித்து வருபவர் தேவேந்திர சிங் தில்லான் (வயது 25). இவர் கைதால் பகுதியில் மே 12ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் தனது முகநூல் பக்கத்தில் துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட தில்லானிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கர்தார்பூர் வழித்தடம் வழியாக பாகிஸ்தானுக்கு சென்றதும், அங்கு பாகிஸ்தான் ராணுவ உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்களை பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் உளவு அதிகாரிகள் தில்லானுக்கு கணிசமான தொகையை செலவழித்து அவரை தங்கள் வலையில் வீழ்த்தியதாக கூறப்படுகிறது.
கைதால் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்தா மோடி இதுகுறித்து கூறுகையில், "முதல் ஆண்டு முதுகலை மாணவரான தில்லான், பட்டியாலா ராணுவ பாசறையின் புகைப்படங்களையும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். அவரது தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அவருக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கும் இடையே பண பரிவர்த்தனை நடந்ததா என்பதை கண்டறிய அவரது வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன" என்றார்.
இதேபோன்ற குற்றச்சாட்டில் பானிபட்டில் 24 வயதான நௌமான் இலாஹி கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு தில்லானின் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவரான நௌமான், ஹரியானாவில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து வந்தார். பாகிஸ்தானுக்கு தகவல்கள் கொடுப்பதற்காக தனது உறவினர் மற்றும் பணிபுரியும் நிறுவனத்தின் ஓட்டுநர் ஆகியோரின் வங்கிக் கணக்குகள் மூலம் முகவர்களிடமிருந்து அவர் பணம் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், பஞ்சாப் காவல்துறையினர் கடந்த வாரம் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருடன் தொடர்புடைய உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பெண் உட்பட இருவரை கைது செய்தனர்.
கடந்த மே 7ஆம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற அதிரடி தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிய நிலையில், மே 10ஆம் தேதி இரு நாடுகளும் தாக்குதல் நிறுத்த உடன்பாட்டை எட்டின.
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பகுதியில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. தற்போது எல்லைப் பகுதியில் அமைதி நிலவும் சூழலில் அடுத்தடுத்து உளவு வழக்குகள் பதிவாகி வருவது பாதுகாப்பு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.