குஜராத்தில் திடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஆப்பு வைக்க ராகுலோடு இணையும் ஹர்திக் பட்டேல்!

By Asianet TamilFirst Published Mar 8, 2019, 10:09 AM IST
Highlights

குஜராத்தில் பட்டேல் இன மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஹர்திக் பட்டேல் காங்கிரஸில் இணையும்பட்சத்தில் அக்கட்சி மேலும் பலமடையும். 

குஜராத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தி பாஜகவுக்கு நெருக்கடி கொடுத்த பட்டேல் இனத் தலைவர் ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குஜராத்தில் படேல் இனத்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தியவர் ஹர்திக் படேல். குஜராத் ஸ்தம்பிக்கும் அளவுக்கு போராட்டம் நடத்தி நாடு முழுவதும் பிரபலமடைந்தார். 2017-ல் நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தார். 
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்க ஹர்திக் படேல் முடிவு செய்திருக்கிறார். சுயேச்சை வேட்பாளராக ஹர்திக் படேல் களமிறங்குவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்திருந்தனர். மேலும் அவருக்கு தேர்தலில்  காங்கிரஸ் ஆதரவு அளிக்கவும் அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் காங்கிரஸே நேரடியாகக் களமிறங்கும் என அக்கட்சி அறிவித்துவிட்டது.
இதையடுத்து காங்கிரஸில் இணைந்து அந்தத் தொகுதியைக் கைப்பற்ற ஹர்திக் பட்டேல் காய் நகர்த்திவருகிறார். வரும் 12-ம் தேதி ராகுல் காந்தி குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அப்போது ராகுல் காந்தியை நேரில் சந்தித்து ஹர்திக் படேல் காங்கிரஸூல் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைப் பற்றி ஹர்திக் படேல் வெளிப்படையாக எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் வட்டாரங்கள், ஹர்திக் பட்டேல் கட்சியில் இணைவார் எனத் தெரிவிக்கின்றன.
குஜராத்தில் பட்டேல் இன மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஹர்திக் பட்டேல் காங்கிரஸில் இணையும்பட்சத்தில் அக்கட்சி மேலும் பலமடையும். குஜராத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை அளித்தது. ஹர்திக் பட்டேல் கைகோர்ப்புக்கு பிறகு குஜராத்தில் கடும் போட்டியை பாஜக எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

click me!