
23 ஆண்டுகளுக்கு பின்னர் கடல் மார்க்கமாக ஹஜ் பயணத்தை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
1995-ல் நிறுத்தம்
நாடு முழுவதும் இருந்து ஆண்டுதோறும் 1.36 லட்சம்பேர் ஹஜ் பயணம் செல்வதற்கு சவூதி அரசு அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில் இந்த எண்ணிக்கை 1.70 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1995-ம் ஆண்டுக்கு முன்பாக கடல்மார்க்கமாக முஸ்லிம்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இதற்காக மும்பை துறைமுகத்தில் இருந்து எம்.வி. அக்பர் என்ற கப்பல் இயக்கப்பட்டு வந்தது. இந்த கப்பல் பழைமை அடைந்ததை தொடர்ந்து கடல்மார்க்க ஹஜ் பயணம் நிறுத்திக் கொள்ளப்பட்டது.
ஹஜ் பயண கொள்கை
இந்த நிலையில் 2018-ம் ஆண்டுக்கான ஹஜ் பயண கொள்கைகளை வகுப்பதற்கு மத்திய அரசு உயர் மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக அந்தக்குழு கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. இதில் மத்திய சிறுபான்மைத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியும் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் கடல் மார்க்கமாக ஹஜ் பயணம் மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து
இதுகுறித்து முக்தர் அப்பாஸ் நக்வி கூறுகையில், கடல் மார்க்கமாக ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆய்வு செய்யப்படும். இது சம்பந்தமாக கப்பல் போக்குவரத்து துறையுடன் பேசி, எந்தெந்த துறைமுகங்கள் ஹஜ் பயணத்திற்கு வசதியாக அமையும் என்பது குறித்து முடிவு செய்யவுள்ளோம். அதே நேரத்தில் ஹஜ்ஜுக்கான விமான போக்குவரத்து சேவையும் தொடரும். அதில் பயணம் செய்ய விரும்புவோர் செய்து கொள்ளலாம் என்றார்.
2-3 நாட்களில் பயணம்
தற்போது விமானம் மூலமாக சவூதி அரேபியாவின் ஜித்தாவுக்கு ஹஜ் பயணிகள் செல்கின்றனர். இதற்கு டிக்கெட் மட்டும் ரூ. 18 ஆயிரத்தில் இருந்து 61 ஆயிரம் வரை உள்ளது. கடல் மார்க்கமாக செல்லும்போது, இதில் பாதி தொகைதான் டிக்கெட்டிற்கு செலவு ஆகும். அதே நேரத்தில், கப்பல் மூலமாக 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம்பேர் வரை ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம். 23 ஆண்டுகளுக்கு முன்பாக மும்பை துறைமுகத்தில் இருந்து ஜித்தா துறைமுகம் செல்வதற்கு ஒரு வாரம் ஆனது. தற்போது நவீன வசதிகளை பயன்படுத்தி 2-3 நாட்களில் ஜித்தாவுக்கு செல்ல முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.