
ராஜஸ்தானில் மாடுகளை இறைச்சிக்காக கொண்டு சென்றவர்களை பசு பாதுகாப்பு அமைப்பினர் சராமாரியாக தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இறைச்சிக்காக மாடுகளை 5 பேர் கொண்ட கும்பல் வேனில் ஏற்றி கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது, ஆல்வார் மாவட்டம், பெக்ரார் என்ற இடத்தில் பசு பாதுகாப்பு அமைப்பினர் மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி அவர்களின் வாகனத்தை வழிமறித்து வேனில் வந்தவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் மாடுகள் ஏற்றி சென்ற வாகனத்தையும் அடித்து உடைத்தனர்.
பசு பாதுகாப்பு அமைப்பினர் அவர்களை சரமாரியாக தாக்கியதில் பெக்லு கான் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாடுகளை ஏற்றி செல்ல தங்களிடம் உரிய ஆவணங்கள் இருப்பதாக காயமடைந்த 4 பேரும் தெரிவித்தனர்.
இதையடுத்து 200 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.