
ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை வரும் ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. ஜி.எஸ்.டி. வரிக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தாலும், ஒரே விதமான வரிவிதிப்பு முறையை ஜூலை முதல் தேதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில், ஜி.எஸ்.டி. வரியை ஜூலை 1 ஆம் தேதி அன்று அமல்படுத்தமாட்டோம் என்று ஜம்மு-காஷ்முர் மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில பொதுப்பணி துறை அமைச்சர் அக்தர், ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஜூலை 1 ஆம் தேதி அன்று காஷ்மீரில் அமல்படுத்த மாட்டாது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியபோது, வர்த்தகர்கள், பிரிவினைவாதிகள், எதிர்கட்சியினர் ஆகியோர் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் கருத்துக்களை அனைத்து கட்சி குழு கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யும். ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடன் கலந்தாலோசனை நடத்தப்படும். அதற்காகவே அண்மையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது என்றார்.
இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட மாட்டாது என்றும், ஜம்மு-காஷ்மீருக்கு அரசியலமைப்பு சட்டப்படி சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே ஜி.எஸ்.டி.யை ஜூலை 1 ஆம் தேதியே அமல்படுத்த வேண்டியது கட்டாயமல்ல என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் அக்தர் தெரிவித்தார்.