
நாடுமுழுவதும் ஜூலை மாதம் நடைமுறைக்கு வர உள்ள சரக்கு மற்றும் சேவை வரியில்(ஜி.எஸ்.டி.) கல்வி, மருத்துவச் சேவைகளுக்கு தொடர்ந்து விலக்கு அளித்து, ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு எடுத்துள்ளது.
அதேசமயம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்களுக்க 12 சதவீதம் வரியும், ரெயில், விமானப்பயணத்துக்கு 5 சதவீதம் வரியும், தொலைத்தொடர்பு, நிதிச்சேவைகளுக்கு 18 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி.
நாடு சுதந்திரம் அடைந்தபின் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தம் ஜூலை 1-ந்தேதி முதல் கொண்டு வரப்பட உள்ளது. நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.
4 வகை வரி
இந்த வரிவிதிப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் இறுதி செய்வதற்காக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது.
14-வது கூட்டம்
இந்நிலையில் ஜி.எஸ்.டி. வரியில் உள்ள 4 பிரிவு வரிகளான 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் ஆகியவற்றை எந்தெந்த பொருட்களுக்கு விதிப்பது குறித்து ஆலோசிக்க ஜம்மு-காஷ்மீர் மாநிலம், நகரில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 14-வது ஆலோசனைக் கூட்டம் கடந்த 2 நாட்களாக நடந்தது.
1,211 வகை பொருட்கள்
இந்த கூட்டத்தில் 1,211 வகையான பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் தங்கத்தைத் தவிர மற்ற பொருட்களுக்கான வரி வீதம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 81 சதவீதம் பொருட்கள் 18 சதவீதம் வரிக்குள்ளும், 19 சதவீத பொருட்கள் அதிகபட்சமாக 28 சதவீத வரிக்குள் கொண்டு வரப்பட்டன.
தங்கம் முடிகாவில்லை
ஜூன் 3-ந்தேதி மீண்டும் கூடஉள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தங்கத்துக்கு விதிக்கப்படும் வரி வீதம் குறித்து முடிவு செய்யப்படும்.
இந்நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் சேவைகளுக்கான வரிவீதம் குறித்து முடிவு செய்யப்பட்டது. அவை குறித்து பின்வருமாறு.
விலக்கு
ஜி.எஸ்.டி. வரியில் இருந்து மருத்தவசேவை, கல்வி ஆகியவற்றுக்கு முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
5சதவீதம்
போக்குவரத்து சேவைகளுக்கு 5 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 6 சதவீதம் வரி வாங்கும் ஓலா, உபர் ஆகிய கால்டாக்சி நிறுவனங்கள் இனி 5 சதவீதம் மட்டுமே வாங்குவார்கள்.
ரெயில்பயணம்
ஏ.சி.யில்லாத ரெயில் பயணத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஏ.சி. பெட்டிகளில் பயணிக்க 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரெயில், புறநகர் ரெயில்கள், ஹஜ்பயணம் உள்ளிட்ட மதரீதியான பயணங்கள் உள்ளிட்டவற்றுக்கு தொடர்ந்து வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விமானம்
விமானப்பயணத்தை பொருத்தவரை எக்கானமி பிரிவில் டிக்கெட் முன்பதிவுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி.வரியும், ‘பிஸ்னஸ் கிளாஸ்’ பிரிவுக்கு 12 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள்
ஏ.சி. அல்லாத ரெஸ்டாரண்ட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி 12 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது, ஏ.சி. வசதியும், மதுபார் வசதியும் கொண்ட ரெஸ்டாரண்ட்களுக்கு 18 சதவீத வரியும், 5 நட்சத்திர ஓட்டல்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ.50 லட்சம் அல்லது அதற்கு குறைவாக விற்றுமுதல் உள்ள ரெஸ்டாரண்ட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.
வௌ்ளையடிக்க வரி
கட்டிடங்கள், அடுக்குமாடி வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் வண்ணம்பூசுதல், வௌ்ளையடித்தல் போன்றவற்றுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
சினிமா தியேட்டர்
பொழுதுபோக்கு வரி ஜி.எஸ்.டியோடு இணைக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், சூதாடும் இடம், ரேஸ் கோர்ஸ் போன்றவற்றுக்கு
28 சதவீதம் வரி வதிக்கப்பட்டுள்ளது.
ஓட்டல்கள்
ஓட்டல்களில் நாள் ஒன்றுக்கு அறைக்கு ரூ.1000 வரை வாடகை பெற்றால் அதற்கு வரிவிலக்கு உண்டு. அதேசமயம், நாள் ஒன்றுக்கு அறைக்கு ரூ. ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை வாடகை வசூலித்தால் 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரை 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.5 ஆயிரத்துக்கு மேல் 28 சதவீதம் வரி செலுத்த வேண்டும். லாட்டரி டிக்கெட்டுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
செல்போன்கள்
ஜூலை மாதத்தில் இருந்து மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும எனத் தெரிகிறது. செல்போன்களுக்கு 12 சதவீதம ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. ெவளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செல்போன்கள் விலை குறையும், அதேசமயம், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட செல்போன்கள் விலை அதிகரிக்கும்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட செல்போன்களுக்கு 27 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில், இனி 12 சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும். அதேசமயம், உள்நாட்டில்தயாரிக்கப்பட்ட செல்போன்களுக்க 5சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்ட நிலையில், இனி 12 சதவீதம் வரி செலுத்த வேண்டியது இருக்கும்.
புகையிலை
பான்மசாலாவுக்கு 60 சதவீதம் கூடுதல் வரியும், புகையிலைக்கு 71 முதல் 204 சதவீதம் கூடுதல் வரியும், நறுமனம் கூட்டப்பட்ட ஜர்தா உள்ளிட்ட பொருட்களுக்கு 160 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது. பான்மசாலா குட்காவுக்கு 204 சதவீத ஜி.எஸ்.டி. வரியும், சிகரெட்களுக்கு 290 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
சிகரெட்
பில்டர் மற்றும பில்டர் அல்லாத 65 மில்லிமீட்டர் சிகரெட்களுக்கு 5 சதவீதம் கூடுதல் வரியும், சிகார்களுக்கு அதிகபட்சமாக 21 சதவீதம் கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.