
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டால் அவர்களுக்கு தகுந்த பதிலடி தரும்வகையில் படைகள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும், இது தனக்கு திருப்தி அளிப்பதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
பாக். அடாவடி
அண்மைக்காலமாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் சிலர் உயிரிழந்தனர். இதனையடுத்து நவுசேரா உள்ளிட்ட எல்லையோர கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் அச்சம்
தொடர்ந்து அத்துமீறலில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருவது எல்லையோர கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஜம்மு காஷ்மீரில் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். வான்வழியாக அவர் ஆய்வு மேற்கொண்டார்.
‘தயாராக இருங்கள்’
பின்னர் ராம்பூர் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமுக்குச் சென்று அங்குள்ள வீரர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். எப்போதும் கண்காணிப்புடன் இருக்குமாறு அவர் வீரர்களுக்கு அறிவுறுத்தினார். எல்லையில் மேற்கொண்ட ஆய்வு குறித்து ஜேட்லி தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லையில் ஆய்வு மேற்கொண்டேன். ராணுவ உயரதிகாரிகள், கமாண்டர்களுடன் ஆலோசனை நடத்தினேன். எல்லையில் படைகள் போதுமான அளவில் இருக்கின்றன. பாகிஸ்தான் அத்துமீறினால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில் வீரர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். ராணுவ படை பலமும், வீரர்களின் தயார் நிலையும் திருப்தியளிப்பதாக இருக்கிறது" என்றார்.