தங்கம், ஜவுளி, பிஸ்கட்டுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும்? நாளை கூடுகிறது GST கவுன்சில்!!

First Published Jun 2, 2017, 4:58 PM IST
Highlights
gst council organising tomorrow about gold and readymades


தங்கம், ஜவுளிகள், பிஸ்கட் உள்ளிட்ட 6 வகையான பொருட்கள், விலை உயர்ந்த பொருட்களுக்கு எத்தனை சதவீதம் வரி விதிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நாளை கூடுகிறது.

ஜி.எஸ்.டி.

நாடுமுழுவதும் ஒரே மாதிரியான வரி முறையான சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை மாதம் முதல் மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர உள்ளது. இதற்கான சட்டங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, மாநில சட்டசபைகளிலும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

4 வகை வரி

இதையடுத்து, ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் போது, 4 வகையான வரிமுறைகள் விதிக்கப்படுகின்றன. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என வரிகள் பிரித்து பொருட்களுக்கும், சேவைகளுக்கும் விதிக்கப்பட உள்ளன.

ஜி.எஸ்.டி. கவுன்சில்

இதில், பொருட்கள், சேவைகளுக்கு எத்தனை சதவீதம் வரி விதிப்பது குறித்து முடிவு செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில், அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் இதில் உறுப்பினராக இருப்பார்கள்.

கடந்த முறை காஷ்மீரில் கூடிய அந்த கூட்டத்தில், 1200 பொருட்கள், 500 சேவைகளுக்கான வரி விகிதங்கள் குறித்து இறுதி செய்யப்பட்டது.

முடிவு செய்யவில்லை

இந்நிலையில், பிஸ்கட், ஜவுளிகள், காலணிகள்(செருப்பு), பீடி, பீடி சுற்றப்படும் இலை, விலை உயர்ந்த உலோகம், முத்துக்கள், கற்கள், காசுகள், மற்றும் அலங்கார நகைகள் ஆகியவற்றுக்கான வரிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இவற்றுக்கான வரி விகிதங்களை முடிவு செய்ய ஜி.எஸ்.டி. கவுன்சில் நாளை டெல்லியில் கூட உள்ளது.

தங்கம்

இதற்கிடையே சில மாநிலங்கள் தங்கத்தக்கு 4 சதவீதமும், விலை உயர்ந்த உலோகங்களுக்கு 2 சதவீதம் மட்டுமே வரி விதிக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம்கோரியுள்ளன.

பிஸ்கட்டுக்கு 12 சதவீதம் வரி

பிஸ்கட்களைப் பொருத்தவரை, ரூ.100 வரை விலை இருக்கும் பிஸ்கட்டுக்குவரிவிலக்கு அளிக்க மாநிலங்கள் கோரியுள்ளன. ஆனால், மத்திய அரசு 12 சதவீதம் வரிவிதிக்க திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள நிலையில், பிஸ்கட்டுக்கு உற்பத்தி வரி விதிக்கப்படுவதில்லை, ஆனால், மாநில அரசுகள் மட்டும் வாட் வரி விதித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால், நாளைய கூட்டத்தில் இவைகள் விவாதிக்கப்படலாம்.

முக்கிய முடிவு

இது குறித்து நிதி அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில் “ டெல்லியில் நாளை(இன்று) கூட இருக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் கூட்டம் மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால், மீதமிருக்கம் சில பொருட்களுக்கான வரி, கூடுதல்வரியை முடிவு செய்ய வேண்டியது இருக்கிறது. மேலும்,ஜி.எஸ்.டி. விதிகளில்  செய்யப்பட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் பெறுவது, அது தொடர்பான திட்டங்கள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!