Opinion: தீ்ர்ப்புகளும்-ஆளுநர் பதவிகளும்-ஓர் பார்வை

By Pothy Raj  |  First Published Feb 16, 2023, 5:00 PM IST

Opinion: மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றபின், ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு ஆளுநர் பதவிகள், தீர்ப்பாயத் தலைவர் பதவிகள் வழங்கப்படுவது அதிகரித்து வருகிறது. 



Opinion “ இரண்டு வகையான நீதிபதிகள் இருக்கிறார்கள். ஒருவருக்கு சட்டம் தெரியும், மற்றொருவருக்கு சட்ட அமைச்சர் தெரியும். ஓய்வுக்குப்பின், நீதிபதிகளுக்கு வழங்கப்படும் பதவிகளால் நீதித்துறையில் அரசின் தலையீடு அதிகரிக்கும். ஓய்வுக்கு முன் வழங்கப்படும் தீர்ப்புகள், ஓய்வுக்குப்பின் கிடைக்கும் பலன்களை வைத்தே கொடுக்கப்படும்”

கடுமையான வார்த்தைகளைக் கூறியது வேறுயாருமல்ல, பாஜகவின் மூத்த தலைவர், பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் மறைந்த அருண் ஜெட்லிதான். 

Tap to resize

Latest Videos

ஆளுநர் பதவிகள்

மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றபின், ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கு ஆளுநர் பதவிகள், தீர்ப்பாயத் தலைவர் பதவிகள் வழங்கப்படுவது அதிகரித்து வருகிறது. 

நீதித்துறையின் உயர்ந்த பதவியில், அதாவது நாட்டின் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்கள்,  கடைசிக் காலத்திலும் தான்வகித்த பதவிக்கும் குறைவான பதவிகளை ஆட்சியாளர்கள் வழங்கினாலும் ஏற்க மறுப்பதில்லை.

தகுதிக்குறைவில்லையா

இதில் என்னவியப்பு என்றால், தலைமை நீதிபதி குடியரசுத் தலைவருக்கே பதவிப்பிரமாணம் செய்துவைக்கும் தகுதியுடையவர். மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பவர், ஆனால், அவர் தனது ஓய்வுகாலத்துக்குப்பின், தான்  வகித்தபதவிக்கு குறைவான அதிகாரம் கொண்ட ஆளுநராகவும், எம்.பி.யாகவும் வகிப்பது முரணாக இருக்கிறது.

சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற எஸ்.அப்துல் நசீர் ஆந்திரப் பிரதேச ஆளுநராக மத்திய அரசு கடந்த வாரம் நியமித்தது.  கடந்த ஜனவரி 4ம் தேதி அப்துல் நசீர் ஒய்வு பெற்ற நிலையில் 5 வாரங்களில் அவருக்கு ஆளுநர் பதவி தரப்பட்டுள்ளதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகக் கேள்வி எழுப்புகின்றன.

கூலிங் பீரியட் ஏன் இல்லை

ஓய்வு பெற்று 5 வாரங்களுக்குள் அவசரம் அவசரமாக அவருக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுவது ஏன், அதற்குரிய அவசரம் என்ன, நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் “கூலிங் பீரியட்” ஏன் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. 

அப்துல் நசீர் ஓய்வுக்குமுன் கடைசியாக வழங்கிய தீர்ப்பு பணமதிப்பிழப்புக்கு எதிரான வழக்கில், அரசின் நடவடிக்கை சரியானதுஎன்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பு வழங்கிய 4 வாரங்களில் ஆளுநர் பதவி பரிசளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதவிகள் வழங்குவது நீதிபதிகள் தங்கள் பணிக்காலத்தில் வழங்கிய தீர்ப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்காதா என்ற விமர்சனமும் எதிர்க்கட்சிகள் தரப்பில் வைக்கப்படுகிறது. 

காங்கிரஸ் ஆட்சி

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்குவது காங்கிரஸ் ஆட்சியிலும் இருந்தது, பாஜக ஆட்சியிலும் இருந்து வருகிறது. இவ்வாறு பதவி வழங்குவது அரிதானது என்றாலும், மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபின் அதிகரி்த்துள்ளது  என்று எதிர்க்கட்சிகள்,சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சயத் பாசில் அலி, ஓய்வு பெற்றபின் ஒடிசா மாநில ஆளுநராக கடந்த 1952ல் நியமிக்கப்பட்டார். ஆனால், அதன்பின் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படாமல் இருந்தது. 
உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியான பாத்திமா பீவி ஓய்வுக்குப்பின், தமிழகத்தின் ஆளுநராக 1997ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 

 

தலைமை நீதிபதி சதாசிவம்(ஓய்வு)

ஆனால், மத்தியில் மோடி அரசு 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின், இந்தக் கலாச்சாரம் மீண்டும் துளிர்விட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பி.சதாசிவம் கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார். 

அதாவது தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டது இதுதான் வரலாற்றிலேயே முதல்முறை. சதாசிவம் நியமனம், அரசியல் வட்டாரத்திலும், சமூகத்திலும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 

தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் ஓய்வுக்குப்பின் எவ்வாறு தனது தகுதிக்கும் கீழ் உள்ள ஆளுநர் பதவியை வகிக்க ஒப்புக்கொண்டார் என்று கேள்வி எழுந்தது.

ரஞ்சன் கோகோய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகய் ஓய்வுக்குப்பின் மாநிலங்களவை எம்.பியாக நியிமிக்கப்பட்டார். தலைமை நீதிபதியாக இருந்த கோகோய், எம்.பி. பதவி வகிக்க எவ்வாறு ஒப்புக்கொண்டார் என்று கேலிப்பேச்சும், விமர்சனமும் எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. 

அதுமட்டுமல்லாமல் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் பூஷன், ஓய்வு பெற்ற 4 மாதங்களில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் யார் ஆந்திரப் பிரதேச ஆளுநராக கடந்த வாரம் நியமிக்கப்பட்டுள்ளார். 

அயோத்தி வழக்கு

இந்த 3 நீதிபதிகளுக்கும்  பதவி வழங்கியதில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இவர்கள் 3 பேருமே அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இருந்தவர்கள். 

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் அமர்வில் அப்துல் நசீர், அசோக் பூஷன் இடம்பெற்றிருந்தார். தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் இருந்தார்.  இந்த வழக்கில் 4:1 என்ற கணக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது 4 நீதிபதிகள் அயோத்தி நிலம் கோயிலுக்கு சொந்தமானது எனத் தீர்ப்பளி்த்த குழுவில் அப்துல் நசீர் இருந்தார்.

இந்த வழக்கில் நீதிபதிகளாக இருந்த அசோக் பூஷன், ரஞ்சன் கோகய், அப்துல் நசீர் ஆகிய 3 பேருக்கு மத்திய அரசு பல்வேறு பதவிகளை வழங்கிவிட்டது. 

சுதந்திரத்தில் சமரசமா

ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக, நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் அரசு வழங்கும் பதவிகளை ஏற்பது முறையானதா. இதுபோன்ற பதவிகளை வழங்குவதால், நீதித்துறை சுதந்திரம் சமரசம் செய்யப்படுகிறதா என்ற கேள்வியும் எதிர்க்கட்சிகள் தரப்பில் எழுகிறது.

ஒரு நீதிபதி தான் விசாரிக்கும் வழக்கில் மனுதாரரோ அல்லது எதிர்மனுதாரரோ தங்களுக்கு உறவினராகவோ அல்லது நண்பராகவோ இருந்தால் அல்லது அவருக்கு சார்பாக கடந்த காலங்களில் வாதாடி இருந்தாலோ அந்த வழக்கிலிருந்து விடுவித்துக் கொள்ளார்கள். 

காரணம், வழக்கு விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும், தீர்ப்பின் மீது களங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நீதிபதிகள் தாங்கள் பதவியில் இருக்கும்போது செய்வது வழக்கம். 
பதவியில் இருக்கும்போது விலகி இருக்கும் நீதிபதிகள், ஓய்வுக்குப்பின் உடனடியாக அரசு வழங்கும் பதவிகளில் அமர்வதற்கு ஆசைப்படுவது எந்தவிதத்தில் அவர்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்தும் என்பது மக்களின் கேள்வியாக இருக்கிறது. ஓய்வுக்குப்பின் நீதிபதிகளுக்கு வழங்கப்படும் பதவி, அவரின் பதவிக்காலத்தில் அவரின் நடத்தை, செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கும். 

நீதி தேவதை தராசு

ஆளுநர் பதவி என்பது தகுதிக்குறைவானது இல்லையே, அதுவும் அரசியலமைப்புச் சட்டபதவிதானே என்று கேட்கலாம். அரசியலமைப்புச் சட்டப்பதவி என்பதைவிட மத்திய அரசின் ஏஜென்ட்டாகவே ஓய்வுக்குப்பின் நீதிபதி நியமிக்கப்படுகிறார் என்பதுதான் நிதர்சனம்.  

நீதி தேவதையின் தராசுகளை கையில் ஏந்தி நீதி வழங்கிய பதவியில் இருந்த நீதிபதிகள், மத்திய அரசை கேள்வி கேட்கும் இடத்தில் இருந்தவர்கள், ஓய்வுக்குப்பின், மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட வேண்டிய நிலைக்கு ஏன் வர வேண்டும்.

இடைவெளி தேவை

நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையே இடைவெளி இருப்பது போல நீதிபதி ஓய்வுக்குப்பின் அந்த இடைவெளி தொடர வேண்டும். அதாவது நீதிபதிகள் ஓய்வு பெற்றபின் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு எந்தவிதமான அரசுப் பதவியும் வகிக்க கூடாது என்ற விதியை கொண்டுவர வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாகும். 

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த 2021, அக்டோபர் 1ம் தேதி பேசுகையில் “ நீதிபதிகள் ஓய்வு பெற்றபின் கண்டிப்பாக 2 ஆண்டுகளுக்கு அரசின் எந்தப்பதவியும் வகிக்க தடைவிதிக்க வேண்டும். 

தீர்ப்பாயத்தின் தலைவர், ஆணையத்தின் தலைவராக உடனடியாக நியமிக்காமல் கூலிங் பீரியட் தேவை. இல்லாவிட்டால் நேரடியாகவோ அல்லதுமறைமுகமாகவோ  அரசு நீதித்துறையில் தலையிடும். சுதந்திரமான, நியாயமான, நடுநிலையான நீதித்துறையை நாம் ஒருபோதும் அடைய முடியாது” எனத் தெரிவித்தார்.

விடை தெரியாத கேள்விகள்

ஆக பாஜக தலைவர்கள் கூட, நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் உடனடியாக பதவிகள் வழங்குவதை விரும்பவில்லை. ஆனால், அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு  ஓய்வுக்குப்பின் அவசரம் அவசரமாக பதவி வழங்குவது ஏன், அவர்களுக்கு மட்டும் ஏன் பதவி வழங்கிட வேண்டும், அப்துல் நசீர் ஓய்வு பெற்ற 4 வாரங்களுக்குள் ஆளுநர் பதவி அவசரமாக வழங்கப்பட்டது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

மறைந்த அருண் ஜெட்லின் வார்த்தையைக் கூறி கட்டுரையை நிறைவு செய்வது சரியாகஇருக்கும், “இரண்டு வகையான நீதிபதிகள் இருக்கிறார்கள். ஒருவருக்கு சட்டம் தெரியும், மற்றொருவருக்கு சட்ட அமைச்சரைத் தெரியும்” 

click me!