ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசு அதிகாரி சஸ்பெண்ட்! காங். அரசு அதிரடி!

Published : Oct 19, 2025, 02:55 PM IST
RSS rally in Karnataka

சுருக்கம்

கர்நாடகாவில், அரசு விதியை மீறி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசு வளர்ச்சி அதிகாரி பிரவீன் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். சீருடையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது.

கர்நாடக மாநிலத்தில், அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்) நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது என அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி, அரசு அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மாநில அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வார்னிங்

கர்நாடக அரசு, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதோடு, அரசு ஊழியர்கள் அதன் நிகழ்வுகளில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசுகூர் தாலுகா ரோடலபண்டா கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த பிரவீன் குமார் என்பவர், கடந்த 12-ந் தேதி லிங்கசுகூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் கலந்துகொண்டார். மேலும், இவர் லிங்கசுகூர் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. மானப்பா வஜ்ஜலின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். சீருடை

ஆர்.எஸ்.எஸ். சீருடையில் பிரவீன் குமார், எம்.எல்.ஏ. மானப்பா வஜ்ஜலுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்திய பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் அருந்ததி சந்திரசேகர், அதிகாரி பிரவீன்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அரசின் அறிவுறுத்தலை மீறி ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம், கர்நாடக அரசு அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!