
கோவாவின் அர்போரா பகுதியிலுள்ள ஒரு பிரபல இரவு விடுதி (சனிக்கிழமை) நள்ளிரவில் தீக்கிரையாக்கப்பட்டது. இந்த துயர சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு கோவாவின் பாகா பகுதியில் உள்ள ‘பிர்ச் பை ரோமியோ லென்’ என்ற புகழ்பெற்ற கிளப்பில் இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு நடந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென புகை பரவியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில், கேஸ் சிலிண்டர் வெடித்ததே இந்த பெரிய தீ விபத்துக்கான காரணம் என்று காவல்துறை கருதுகிறது.
தீ வேகமாக பரவியதால் உள்ளே இருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் பெரும் சேதம் ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த கிளப்பின் சமையல் மற்றும் சேவை பிரிவில் பணிபுரிந்த தொழிலாளர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த தகவல் கிடைத்தவுடன் மூத்த காவல்துறை அதிகாரிகள், டிஜிபி அலோக் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை அதிகாரிகள், “தற்போது 23 பேர் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மீட்பு மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தனர்.
இதே நேரத்தில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், பாகா தொகுதி எம்எல்ஏ மைக்கேல் லோபோ ஆகியோரும் கிளப்பிற்கு சென்று நிலைமையை பார்வையிட்டனர். தீயை அணைக்க தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படைகள் பல மணிநேரம் போராட வேண்டியிருந்தது. இந்த துயர சம்பவம் கோவாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.