
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர், மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து பேசி இருக்கிறார். இது காங்கிரஸ் கட்சித் தலைமையில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ஒரு நிகழ்வில் பிரதமர் மோடி ஆற்றிய உரை குறித்துப் பாராட்டியுள்ளார்.
இந்தியா இனிமேல் ஒரு 'வளர்ந்து வரும் சந்தை' மட்டுமல்ல, உலகிற்கே ஒரு வளர்ச்சிக்கான முன்மாதிரியாக (emerging model) உள்ளது என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக சசி தரூர் கூறினார். கொரோனா தொற்றுநோய், உக்ரைன் ரஷ்யா போர் ஆகியவற்றைக் கடந்து வளர்ந்துகொண்டிருக்கும் இந்தியாவை உலகம் உற்று கவனித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார் என சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் தேர்தல் மனநிலையில் இருப்பதாகத் தன்மீது குற்றம் சாட்டப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் தான் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என உணர்ச்சிபூர்வமான மனநிலையில் (emotional mode) இருப்பதாக பிரதமர் கூறினார் என சசி தரூர் எடுத்துரைத்தார்.
பிரதமரின் பேச்சின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி, இந்தியாவில் கல்வி மீதான காலனித்துவத்தின் தாக்கம் குறித்து இருந்தது.
மெக்காலேவின் 200 ஆண்டுகால அடிமை மனப்பான்மையை மாற்றியமைப்பது குறித்த கருத்துகள் பிரதமரின் உரையில் முக்கிய அம்சமாக இருந்தது என்று தரூர் தெரிவித்தார்.
இந்தியாவின் பாரம்பரியம், மொழிகள் மற்றும் அமைப்புகளின் பெருமையை மீட்டெடுக்க 10 ஆண்டு தேசிய இயக்கம் தேவை என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார் என்றும் சசி தரூர் கூறினார்.
இதுபோல் சசி தரூர் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசுவது இது முதல் முறையல்ல.
கடந்த சில மாதங்களாகவே, சசி தரூருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே உள்ள உறவு மோசமடைந்து வருகிறது. குறிப்பாக, காந்தி குடும்பத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை பிரதமர் கையாண்ட விதம் குறித்தும், 'ஆபரேஷன் சிந்தூர்' எனப்படும் இந்தியாவின் இராணுவ நடவடிக்கை குறித்தும் சசி தரூர் பேசிய கருத்துக்கள், கட்சிக்குள் கடுமையான விமர்சனங்களைத் தூண்டிவிட்டன.
இந்த மாத தொடக்கத்தில், 'இந்திய அரசியல் ஒரு குடும்பத் தொழில்' என்ற கட்டுரையை தரூர் எழுதினார். அதில் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வாரிசு அரசியலை அவர் விமர்சித்தார்.