
காங்கிரஸ் தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய ஜி-23 தலைவர்களுக்கு இனிவரும் காலத்தில் பதவி வழங்கப்பட்டு, முக்கியத்துவம் வழங்கப்படலாம் என்பதால், தலைமையுடன் இணக்கமாகச் செல்வார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
போர்க்கொடி
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும், புதிய,எழுச்சியான தலைமை வேண்டும் எனக் கோரி மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத்,ஆனந்த் சர்மா, கபில் சிபல், மணிஷ் திவாரி, பூபேந்திரசிங் ஹூடா உள்ளிட்ட பலதலைர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதிலிருந்து மூத்த தலைவர்கள் பலரும் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டனர். குலாம்நபி ஆசாத்துக்கு எம்.பி.பதவிக்கால் முடிந்தும் அவருக்கு மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சி நிர்வாகத்திலும் முக்கியப் பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை
தலைமை மாற்றம்
சமீபத்தில் நடந்த 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுமோசமான தோல்வியைச் சந்தித்தநிலையில் காங்கிரஸ் தலைமை குறித்து மூத்த தலைவர்கள் விமர்சித்திருந்தனர். விரைவில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சோனியாவுடன் சந்திப்பு
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, கடந்த வாரம் மூத்த தலைவர் குலாபம் நபிஆசாத் சந்தித்துப் பேசினார். அப்போது மூத்த தலைவர்கள் அனைவருக்கும் கட்சியிலும், நிர்வாகத்திலும் உரிய முக்கியப் பதவிகள் வழங்கப்படும், யாரும் புறக்கணிக்கப்படமாட்டார்கள் என்று சோனியா காந்தி உறுதியளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இமாச்சலப்பிரதேசத்துக்கு தேர்தல் நடக்கும்போது, மூத்த தலைவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசுவதாக சோனியா காந்தி தெரிவித்ததாக தகவல்கள் தெரிவித்தன.
எம்.பி. பதவி
இதனிடையே கடந்த இரு ஆண்டுகளாக குலாம்நபிஆசாத் எம்.பி. பதவி இன்றி, நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடு்க்கப்படாமல் இருந்து வருகிறார். குலாம்நபி ஆசாத்தை மாநிலங்களவை எம்.பி.யாக்கவும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிகிறது. அடுத்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆனந்த் சர்மாவுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் தலைமை கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை மாநில காங்கிரஸ் தலைவராகவும் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அதேபோல மணிஷ் திவாரி, சந்தீப் தீக்சித் ஆகியோருக்கும் கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது
தலைமை பதவி காலியில்லை
கடந்த வெள்ளிக்கிழமை சோனியா காந்தியைச் சந்தித்தபின் குலாம்நபி ஆசாத் அளித்தப் பேட்டியில் “ எங்களின் கோரிக்கையை சோனியா காந்திகேட்டறிந்தார். ஆதலால், காங்கிரஸில் தலைமைக்கு மாற்றம் தேவை என்ற பேச்சுக்கு இடமில்லை. இப்போதைக்கு தலைவர் பதவிகாலியில்லை.
சோனியா காந்தியை பதவிவிலகக் கூறி யாரும் கூறவில்லை. காங்கிரஸின் தலைவர் சோனியா காந்தி , நாங்கள் கட்சியின் தலைவர்கள். கட்சியை நிர்வாகரீதியாக சீரமைக்க வழங்கப்பட்ட ஆலோசனைகள் பொதுவெளியில் கூற முடியாது. தலைவர் பதவிக்கு தேர்தல் நடக்கும்போது முடிவு செய்யப்படும்”எ னத் தெரிவித்தார்