டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு இதுவரை இல்லாத அளவிற்கு உயர்மட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் தேசிய பாதுகாப்புப் படை இறங்கியுள்ளது.
டெல்லியில் வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் தேசிய பாதுகாப்புப் படை இறங்கியுள்ளது. இதுவரை இந்திய வரலாற்றில் எந்த நிகழ்வுக்கும் பயன்படுத்தாத பயங்கரவாத எதிர்ப்பு, நாசவேலை எதிர்ப்பு, ட்ரோன் எதிர்ப்புப் படை, துப்பாக்கி சுடும் வீரர்கள், ரசாயன தாக்குதல்களை எதிர்கொள்ள சிறப்புப் படை, வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் என்று சகல பாதுகாப்புகளையும் தேசிய பாதுகாப்புப் படை செய்து வருகிறது.
undefined
ஜி20 கூட்டம்: ஜோ பைடன், ஜி ஜின்பிங் தங்கும் சொகுசு ஹோட்டல்கள்!
தேசிய பாதுகாப்புப் படையில் முக்கிய அங்கம் வகிப்பது கறுப்புப் பூனை படை. ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், உடனடியாக களத்தில் இறங்குவதற்கு இந்தப் படையும் தயாராக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படைகளுக்கு பின்புலமாக டெல்லி போலீசாரும் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகளின் தலைவர்கள் தங்கி இருக்கும் ஓட்டல்களில் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் நிறுத்தப்பட்டு இருப்பார்கள்.
எந்தவித சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் துப்பாக்கிச் சுடும் வீரர்கள் பல்வேறு முக்கிய இடங்களில் மறைந்திருந்து சிக்கலான சூழலையும் எதிர்கொள்வார்கள். அனைத்து முக்கிய இடங்களிலும் வெடிகுண்டு அகற்றும் குழுக்கள் சோதனை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. உச்சிமாநாட்டின் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலும் விரைவாக களத்தில் இறங்கி பதிலடி கொடுப்பதற்கு இந்தக்குழு தயாராக இருக்கும். மேலும் தலைநகரில் வெடிகுண்டு அச்சுறுத்தல்களை தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் வாகனங்கள் மூலம் கட்டுப்படுத்தவும் வாகனங்கள் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டு இருக்கும்.
டெல்லியில் ஜி20 கூட்டம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரம்!
மேலும் ட்ரோன்கள் எந்த வகையிலும் பறப்பதை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய விமானப் படை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றுடன் தேசிய பாதுகாப்புப் படை இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணு வெடிப்பு போன்ற தற்செயல் சம்பவங்களை கையாளவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு உறுப்பு நாடுகளும் தங்களது தலைவர்களுக்கு எந்த மாதிரியான அச்சுறுத்தல் இருக்கிறது, எந்த மாதிரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளன. இதைப் பொறுத்து அந்தந்த நாடுகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.