ஜி20 உச்சி மாநாட்டில் உக்ரைன் போர் குறித்த முக்கியத் தீர்மானம்! ரஷ்யா, சீனா ஒப்புதலுடன் கூட்டறிக்கை வெளியீடு!

By SG Balan  |  First Published Sep 9, 2023, 8:37 PM IST

பாலி பிரகடனத்தின் போது, ஒருமித்த கருத்துக்கு வராத சீனாவும் ரஷ்யாவும் இப்போது, இந்தியா தலைமையில் நடக்கும் ஜி20 மாநாட்டில் உக்ரைன் போர் குறித்த தீர்மானத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளன.


இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் ஒரு பெரிய சாதனையாக, டெல்லி பிரகடனம் என்று அழைக்கப்படும் மாநாட்டு கூட்டறிக்கையில் உக்ரைன் போருக்கு அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பது குறித்த தீர்மானத்திற்கு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

கடந்த 2022ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கொண்டுவரப்பட்ட பாலி பிரகடனத்தில் இணையாமல் விலகி இருந்த ரஷ்யாவும் சீனாவும் இந்த முறை கூட்டறிக்கையில் இணைய முன்வந்துள்ளன. குறிப்பாக, உக்ரைன் - ரஷ்யா இடையேயான போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்ற தீர்மானத்துக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பது இந்தியாவின் முயற்சிக்குக் கிடைத்துள்ள வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

தலைநகரில் சனிக்கிழமை தொடங்கிய G20 உச்சிமாநாட்டுக்கான தயாரிப்புடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் ஏசியாநெட்க்கு அளித்த பேட்டியில், "டெல்லி பிரகடனத்தில் ஒருமித்த கருத்தை நோக்கி நகர்ந்திருக்கிறோம். கடந்த ஆண்டு பாலி பிரகடனத்தின் போது, ரஷ்யா ஒருமித்த கருத்துக்கு வரவில்லை. அதேபோல சீனாவும் உக்ரைன் போர் விவகாரத்தில் இருந்து தங்களைத் விலக்கிக்கொண்டது" என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவும் சீனாவும் ஜி20 ஒரு பொருளாதார மன்றமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. மேலும் ரஷ்யா - உக்ரைன் மோதல் பிரச்சினையை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு (UNSC) விட்டுவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. ஆனால், அவ்விரு நாடுகளும் இப்போது இந்தியா போர் தொடர்பாக கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஒப்புக்கொண்டுள்ளன.

கடுமையான வார்த்தைகள் எதுவும் குறிப்பிடப்படாது என்ற வாக்குறுதி அளித்ததன் பேரில் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக நெருக்கமான வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் ரஷ்யா இடையேயான தாக்குதல்கள் மற்றும் அதற்கான அமைதியான தீர்வு ஆகியவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போருக்கான காலம் அல்ல, மாறாக உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே சிறந்தது என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

G20 உச்சி மாநாட்டின் டெல்லி பிரகடனத்தில் இந்தியா கவனம் செலுத்திய புள்ளிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 2016 G20 உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையான வளர்ச்சி இலக்குகளில் இருந்து இந்தியா முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய், காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, பாலைவனமாதல் மற்றும் நிலச் சீரழிவு, சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் மாசுபாடு, கற்றல் நெருக்கடி, பொருளாதார மந்தநிலை, அதிகரித்து வரும் கடன் பாதிப்பு, வளர்ந்து வரும் வறுமை மற்றும் சமத்துவமின்மை, பாலின சமத்துவமின்மை, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற சவால்கள் மற்றும் நெருக்கடிகள் பிரகடத்தில் இடம்பெற்றுள்ளன.

சுகாதார அணுகுமுறை, எரிசக்தி சந்தையில் ஏற்ற இறக்கம், உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் ஆகியவை நீண்ட கால வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன என்றும் 2030 க்குள் கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வை எட்டும் இலக்கை இவை தடுக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடனில் சிக்கியுள்ள நாடுகள் வளர்ச்சிக்கான வளங்களை  அடைவதற்குத் தடையாக உள்ள இடைவெளிகளை நிரப்ப இந்தியா இலக்கு வைத்துள்ளது. இவையும் 2023 டெல்லி பிரகடனத்தின் பகுதியாக அமைகின்றன.

click me!