
கேரள மாநிலத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியானோர் எண்ணிக்கை இன்று 14 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த வைரஸ் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான மருந்தோ, தடுப்பு மருந்தோ, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் நிபா வைரஸ் குறித்து பீதி அடைந்திருக்கின்றனர் மக்கள்.
நிபா வைரஸ் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள முடியும். என்றிருக்கும் நிலையில், கேரள சுகாதாரத்துறை சில அறிவிப்புகளை மக்களுக்கு கொடுத்திருக்கிறது.
அதன் படி பழந்திண்ணி வெளவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம் எனவே, மரத்திலிருந்து கீழே விழும் பழங்களை உண்ண வேண்டாம். என அறிவுறுத்தி இருக்கிறது கேரள சுகாதாரத்துறை.
மேலும் வாழைப்பழம், கொய்யா, மாம்பழம், முந்திரிப்பழம் போன்றவற்றை பழந்திண்ணி வெளவால்கள் விரும்பி உண்ணும். ஆதலால் இந்த பழங்களை இன்னும் சில நாட்களுக்கு உண்ணாதீர்கள் என குறுஞ்செய்திகள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி இருக்கிறது.
இதனால் கேரளாவில் பழங்கள் விற்பனை வெகுவாக குறைந்திருக்கிறது. பழங்கள் வாங்கவே மக்கள் பயப்படுகின்றனர். ஏ.என்.ஐ டிவிட்டரில் வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியில் பழ வியாபாரி ஒருவர் இதனை தெரிவித்திருக்கிறார். நிபா வைரஸினால் ஏற்பட்டிருக்கும் பீதியால் மக்கள் இப்போது பழங்கள் வாங்குவதை குறைத்துவிட்டனர். ”பாதிவிலைக்கு கொடுத்தால் கூட பழம் வாங்க யாரும் தயாராக இல்லை” என அந்த வியாபாரி அதில் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.