தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசாங்க பங்களாவை காலி செய்துள்ளார்
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழு அறிக்கையின் பரிந்துரை நாடாளுமன்ற மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, மஹுவா மொய்த்ராவுக்கு டெல்லியில் ஒதுக்கப்பட்டிருந்த அரசாங்க பங்களாவை காலி செய்யுமாறு எஸ்டேட் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ரா டெல்லியில் டெலிகிராப் லேனில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசாங்க பங்களாவை காலி செய்துள்ளார்.
இந்த தகவலை அவரது வழக்கறிஞர் ஷதன் ஃபராசத் உறுதி செய்துள்ளார். “மஹுவா மொய்த்ராவுக்கு டெலிகிராப் லேனில் ஒதுக்கப்பட்ட வீடு எண் 9B இன்று காலை 10 மணிக்கு காலி செய்யப்பட்டது. அதிகாரிகள் வருவதற்கு முன்பே வீடு காலி செய்யப்பட்டது. அதிகாரிகள் வந்து யாரையும் வெளியேற்றவில்லை.” என அவர் தெரிவித்தார்.
மஹுவா மொய்த்ராவுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்ய குழு ஒன்றை எஸ்டேட் இயக்குநரகம் அனுப்பியதாகவும், அதைச் சுற்றியுள்ள பகுதி தடை செய்யப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் வருவதற்கு முன்பே வீடு காலி செய்யப்பட்டது; அதிகாரிகள் யாரையும் வெளியேற்றவில்லை என மஹுவா மொய்த்ராவின் வழக்கறிஞர் விளக்கம் தெரிவித்துள்ளார். வீட்டு சாவி எஸ்டேட் இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பில்கிஸ் பானு வழக்கு: குற்றவாளிகளின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!
கடந்த மாதம் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ரா, வீட்டை காலி செய்யுமாறு, இந்த வார தொடக்கத்தில் எஸ்டேட் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால், நோட்டீஸை ரத்து செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.
முன்னதாக, நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவலையில் உள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.