முன்னாள் பிரதமர்கள், ஜனாதிபதிகள் மன்மோகன், பிரணாப் முகர்ஜி, வாஜ்பாய், அரசு வீடுகளை இழப்பார்களா?

First Published Jan 7, 2018, 5:15 PM IST
Highlights
former pm president would vacate their government houses


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அடல் பிஹாரி வாஜ்பாய், தேவே கவுடா, முன்னாள் ஜனாதிபதிகள் பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் தாங்கள் வசித்து வரும் அரசு வீடுகளை இழப்பது குறித்து விரைவில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட உள்ளது.

முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் அளித்த பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் முன்னாள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் வீடுகளை இழப்பார்கள்.

தனியார் தொண்டு நிறுவனமான ‘லோக் பிரகாரி’ கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்து இருந்தது. அதில், முன்னாள் முதல்வர்களுக்கு அரசு வீடுகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், முன்னாள் பிரதமர், ஜனாதிபதி, முதல்வர்களுக்கு அரசு வீடுகளை ஒதுக்கீடு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை அப்போது விசாரணை செய்த நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவின் சின்ஹா ஆகியோர் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியத்தை நீதிமன்ற ஆலோசகார நியமித்தனர். முன்னாள் பிரதமர், ஜனாதிபதிகளுக்கு அரசு வீடுகளை ஒதுக்கலாமா என்பது குறித்து ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை அளிக்க கோரப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள் ரஞ்சன்கோகாய், பானுமதி முன் இதை தாக்கல் செய்தார். அது குறித்து சுப்பிரமணியம் கூறுகையில், “ அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிரதமர், ஜனாதிபதி ஆகிய பதவிகளில் இருந்தவர்கள் அந்த பதவிக்குபின் சாதாரண குடிமகன்களாக நடத்தப்பட வேண்டும், அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் வழங்கக்கூடாது. அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை பறிக்கலாம்.

இதற்கு முன் அரசு வழங்கிய வீடுகள் சிலவற்றை அந்த தலைவர்களின் குடும்பத்தினர் நினைவு இல்லங்களாகவும் மாற்றியுள்ளனர். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் வாழ்ந்த வீடுகள் பாபு ஜக்ஜீவன் ராம் அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்டு நினைவு இல்லமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்களுக்கு அரசு வீடுகளை ஒதுக்குவது என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமையை மீறியதாகும். அரசின் சொத்துக்களை, உயர்பதவி வகித்து இருந்தாலும் கூட தனி மனிதர்களுக்கு தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அதேசமயம், அரசு வீடுகளை சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க நபர்களின் குடும்பத்தினருக்கும், அந்த நபர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவிக்கும் அளிக்கலாம் ’’ எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் கோகாய், ஆர். பானுமதி ஆகியோர் இந்த பரிந்துரைகள் மீது விசாரணையை வரும் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

click me!