உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ரவுடி ஒருவர் அம்மாநில கோயில் ஒன்றுக்கு 101 கிலோ எடை கொண்ட மணியை காணிக்கையாக அளித்துள்ளார்
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மத்திய சிறையில் இருந்து 23 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் ரவுடி நஜ்ஜு என்கிற ரஜ்ஜு என்பவர் விடுதலையாகியுள்ளார். கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டம் பரூர் பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு 101 கிலோ எடை கொண்ட மணியை காணிக்கையாக அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் விலகி இருக்குமாறு இளைய தலைமுறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஷாஜகான்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 12 ஆண்டுகாலம் ரவுடியிசம் செய்து வந்த நஜ்ஜு என்கிற ரஜ்ஜுவுக்கு தற்போது 58 வயதாகிறது. குற்ற வழக்குகளில் சிறை சென்ற அவர் 23 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலையாகியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, பரூர் பகுதியில் உள்ள கோயில் ஒன்றுக்கு 101 கிலோ எடை கொண்ட மணியை காணிக்கையாக அளித்துள்ளார். அந்த நிகழ்வில், கத்ரா சட்டமன்றத் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. வீர் விக்ரம் சிங்கும் கலந்து கொண்டார். அப்போது பேசிய வீர் விக்ரம் சிங், முன்னாள் ரவுடியான நஜ்ஜு என்கிற ரஜ்ஜுவை ‘மரியாதைக்குரிய மாமா’ என அழைத்தார். அத்துடன், அவர் நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “அவர் செய்த தவறு எதுவாக இருந்தாலும், அவர் 23 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். இன்று, 23 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை இந்த மண்ணில் வரவேற்கிறேன், அவரை கவுரவிக்கிறேன்.” எனவும் தெரிவித்தார்.
மேலும், “யாராவது குற்றத்தை விட்டுவிட்டு சமூகத்தின் நீரோட்டத்தில் சேர விரும்பினால், அவர்களுக்கு நான் உதவுவேன். நஜ்ஜு என்னுடன் கோவிலுக்கு வந்து, தான் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்டார். ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை வாழவும் அவர் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.” என வீர் விக்ரம் சிங் தெரிவித்தார்.
மணியை காணிக்கையாக வழங்கிய பிறகு, நஜ்ஜு தான் செய்த குற்றங்களுக்காக மனம் வருந்தினார். மேலும் இளைய தலைமுறையினர் குற்றங்களில் இருந்து விலகி தங்கள் எதிர்காலம் மற்றும் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கல்லூரி மாணவியை வெறி தீர கற்பழித்த கொடூரர்கள்.. ஆன்லைன் மோகத்தால் வந்த விபரீதம்
காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் குமார் மீனா கூறுகையில், மாவட்டத்தில் நஜ்ஜு மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் அவர் மீதான 1999 ஆம் ஆண்டு கொலை வழக்கும் அடங்கும். அந்த வழக்கில் அவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பரேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
“1999 ஆம் ஆண்டில், காவல் துணை ஆய்வாளர்கள் 3 பேரையும், ஒரு காவலரையும் நஜ்ஜு சுட்டுக் கொன்றார். அதைத் தொடர்ந்து, காவல்துறையின் நடவடிக்கை காரணமாக அவர் 1999 இல் சரணடைந்தார். அதன் பின்னர், வழக்கு விசாரணையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் பரேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.” எனவும்அசோக் குமார் மீனா தெரிவித்துள்ளார்.
ஷாஜகான்பூர், பரேலி, ஃபரூகாபாத், புடான், எட்டா மற்றும் ஹர்தோய் ஆகிய மாவட்டங்களில் நஜ்ஜுவின் கும்பல் செல்வாக்கு மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.