
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக சமீபத்தில் பதவியேற்ற நீதிபதி பி.ஆர். கவாய், தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவின் மும்பைக்கு முதல் முறையாக வருகை தந்தபோது, அவரை வரவேற்க மாநிலத்தின் உயர் அதிகாரிகள் யாரும் வராதது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், நீதித்துறை மரபுகளை மீறியதாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 18, 2025) மும்பை தாதரில் மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் சென்றிருந்தார். மரபுப்படி, இந்திய தலைமை நீதிபதியை மாநில தலைமைச் செயலாளர், மாநில காவல்துறை தலைவர் மற்றும் மும்பை காவல் ஆணையர் ஆகியோர் வரவேற்க வேண்டும். ஆனால், இந்த முக்கிய அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை.
விழாவில் பேசிய நீதிபதி கவாய், "ஜனநாயகத்தின் தூணான நீதித்துறைக்கு, மற்ற துறைகள் காட்டும் இதுபோன்ற மரியாதையைக் கொடுப்பது கவலையளிக்கிறது. நீதித்துறை, சட்டப்பேரவை, நிர்வாகம் ஆகிய மூன்றும் ஜனநாயகத்தின் மூன்று தூண்கள். இவை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு துறையும் மற்றொன்றுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளுக்கு நெறிமுறைகள் இருக்கும். ஆனால், மாநில காவல்துறை தலைவர், மும்பை காவல் ஆணையர் வர விரும்பவில்லை என்றால் அதுபற்றி அவர்கள்தான் சிந்திக்க வேண்டும்" என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
பின்னர், சில மணிநேரங்களில் தாதரில் உள்ள அம்பேத்கரின் நினைவிடமான சைத்ய பூமிக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் சென்றபோது, மாநில தலைமைச் செயலர் சுஜாதா சௌனிக், காவல்துறை தலைவர் ரஷ்மி சுக்லா, மும்பை காவல் ஆணையர் தேவன் பாரதி ஆகியோர் வந்திருந்தனர். இந்த சம்பவம், சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 8, 2024 அன்று நடைபெற்ற உச்ச நீதிமன்ற விசாரணையின்போது, நீதிபதி பி.ஆர். கவாய், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகள் இடஒதுக்கீட்டுப் பலன்களைத் தொடர்ந்து பெற வேண்டுமா என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
இடஒதுக்கீட்டுப் பலன்கள் பல தலைமுறைகளாக ஒருசில குடும்பங்களுக்கு மட்டுமே சென்று சேர்கிறதா என அவர் சந்தேகம் எழுப்பியிருந்தார். இந்த இரண்டு சம்பவங்களும் நீதித்துறையின் சுதந்திரம், மரபுகள் மற்றும் சமூக நீதி குறித்த விவாதங்களை மீண்டும் ஒருமுறை எழுப்பியுள்ளன.