பாதுகாப்புப் படையினர் முகாமுக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுத்தனர்.
செவ்வாயன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பிராந்தியத்தில் சுக்மா-பிஜப்பூர் மாவட்டங்களின் எல்லையில் புதிதாக நிறுவப்பட்ட போலீஸ் முகாமில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த என்கவுன்டரில் மூன்று பாதுகாப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். மேலும் 14 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது என்றும் காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக ராய்பூருக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, பஸ்தர் பிராந்தியத்தில் சுக்மா-பிஜப்பூர் எல்லையில் ஜாகர்குண்டா மலைகளுக்கு அருகே உள்ள தெகுல்குஹ்டம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு முகாம் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, இந்தச் சண்டை மூண்டது.
சிஆர்பிஎஃப், சிறப்பு அதிரடிப் படை, மாவட்ட ரிசர்வ் காவலர்களின் கோப்ரா-எலைட் பிரிவு பாதுகாப்புப் படையினர் முகாமுக்கு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நக்சல்கள் துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக பதிலடி கொடுத்தனர்.
ஒரு ஜவான் புல்லட் காயம் அடைந்தார், மற்ற பதின்மூன்று பேர் மாவோஸ்யிடுகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் காயமடைந்தனர். காயமடைந்த அனைத்து வீரர்களின் நிலையும் ஆபத்தில் இல்லை என்று காவல்துறை அறிக்கை கூறுகிறது.
2021ஆம் ஆண்டில் இதே இடத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 23 பாதுகாப்புப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 33 பேர் காயமடைந்தனர். இறந்த அனைத்து வீரர்களின் உடல்களையும் மீட்க காவல்துறைக்கு இரண்டு நாட்கள் ஆனது. மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த இப்பகுதி மாவோயிஸ்ட் தளபதி ஹித்மாவின் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.