BREAKING காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் பட்டாசு வெடிக்கத் தடை.. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு

By vinoth kumarFirst Published Nov 9, 2020, 11:24 AM IST
Highlights

நாட்டிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நாட்டிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றுமாசு காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை விதிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் டெல்லி, அரியானா மற்றும் உத்தரபிரதேசத்திற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஏற்கனவே பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டை தடை செய்துள்ளன.

இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் ஆந்திரா, அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேகாலயா, தமிழ்நாடு உள்ளிட்ட 23 மாநிலங்களில் உள்ள 122 நகரங்களில் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த பசுமைத் தீர்ப்பாயம் தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநில தலைமைச் செயலர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பிருந்தது.

காற்று மாசினைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்களும் எழுத்துப் பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில், நாட்டிலேயே காற்று மாசு அதிகமுள்ள நகரங்களில் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்கத் தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேவேளையில், காற்று மாசால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் நவம்பர் 30-ம் தேதி வரை  பட்டாசுகள் விற்பனை செய்யவும் வெடிக்கவும் தடை விதித்துள்ளது. நாட்டில், காற்று மாசு குறைவாக இருக்கும் மற்ற பகுதிகளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

click me!