
குருக்கிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் 7 வயது சிறுமி ஒருவருக்கு டெங்கு சிகிச்சை அளிக்க அந்த மருத்துவமனை 18 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்தாகவும், ஆனாலும் அந்த குழந்தை இறந்துவிட்டதாகவும் எழுந்த புகாரில் ஃபோர்டிஸ் மருத்துவமனை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஃபோர்டிஸ் தனியார் மருத்துவமனையில் ஏழு வயது சிறுமிக்கு டெங்கு சிகிச்சை அளிக்க 18 லட்ச ரூபாய் வசூலித்ததாகவும், இருந்தும் அந்தச் சிறுமி இறந்துவிட்டதாகவும் ட்விட்டரில் பதிவு செய்த அக்குழந்தையின் தந்தை ஜெயந்த் சிங் டிசம்பர் 8ஆம் தேதி குருக்கிராம் காவல் நிலையத்தில் முறையான புகார் ஒன்றை அளித்தார்.
அதில் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் மருத்துவமனை நிர்வாகத்துக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு கோரியிருந்தார். மேலும், இந்தப் புகாரில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருமே தனது மகளைக் கொடூரமாகக் கொன்றுவிட்டனர் என புகாரில் தெரிவித்திருந்தார்.
மேலும், “தவறான சிகிச்சைக்கான சான்றுகளை அழிக்கும்பணியில் ஈடுபட்டதால் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இம்மருத்துவமனை நிர்வாகம், சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், பணியாளர்கள் அனைவரும் மோசடித்தனம் மற்றும் குற்றவியல் சதித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் முக்கியக் குற்றவாளி டாக்டர் விகாஸ்தான். எனது மகளுக்கு வைக்கப்பட்டிருந்த காற்றோட்டக்குழாய் மற்றும் சுவாசக்குழாய் வால்வுகளை அகற்றியதுதான் அவர் மரணமடையக் காரணம். இதனால் உயிர்காக்கும் உபகரணங்களை அகற்றிய சில நிமிடங்களுக்குள் அவர் மூச்சுத்திணறி இறந்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் உயிர் போகக் காரணமான டாகடர் குரூக்ராம் மற்றும் ஃபோர்டிஸ் மெமோரியல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் நேற்று ட்விட்டரில், ''ஹரியானா சுகாதாரத் துறை புகாரின்பேரில், குருக்கிராமில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு எதிராக ஸுஷாந்த் லோக் குருக்கிராம் காவல் நிலையத்தில் 304 பிரிவின்கீழ் பாகம் 2இன்படி வழக்கு எண்.639இல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது'” என்று தெரிவித்துள்ளார்.