
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 ஆண்டுகளாக, தமிழக அரசு சார்பில் வாதாடப்பட்டது. ஆனால், எவ்வித பலனும் இல்லை.
இதேபோல், கர்நாடகா மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா போட்டியையும் நடத்த கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்து இருந்தது. கம்பாலா போட்டி நடத்த வேண்டும் என அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதிலும் எந்த பலனும் ஏற்படவில்லை.
இதற்கிடையில், இந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.
இதையடுத்து கடந்த 15ம் தேதி, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக கல்லூரி மாணவர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவர்கள், அங்கு திரண்டனர். அப்போது, சிலர் காளைகளை அவிழ்த்துவிட்டனர்.
இதனால், போலீசார் தடியடி நடத்தினர். மேலும் 250க்கு மேற்பட்டோரை கைது செய்தனர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்தது. சென்னை மெரினா கடற்கரையில் லட்சத்துக்கு மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் திரண்டு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, தமிழக அரசு, ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வந்தது. இதையடுத்து சட்டப்பேரவையில் வரைவு மசோதா தாக்கல் செய்தது.. இதைதொடர்ந்து வரும் பிப்ரவரி 1, 2, 5 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் புரட்சியால், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த, தமிழக அரசு அனுமதி அளித்ததை போல, கர்நாடகாவிலும் வரைவு மசோதா தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கன்னடர்களின் பாரம்பரிய விளையாட்டான கம்பாலா போட்டி நடத்த வேண்டும் என, மாணவர்களின் புரட்சி வெடித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் கம்பலா விளையாட்டு போட்டி நடத்த வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக மாநிலம் பகுதியில் இன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கிவிட்டனர்.
கன்னட பாரம்பரியத்தை காக்க கம்பலா விளையாட்டு போட்டி மீண்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோஷமிட்டு வருகின்றனர். மேலும், பாரம்பரிய விளையாட்டு போட்டிக்கு தடை விதிக்கும், பீட்டா அமைப்பு எதிராக குரல் எழுப்பும் அவர்கள், பீட்டாவை தடை செய் எனவும் கோஷமிடுகின்றனர்.
கம்பலாவுக்கு ஆதரவாக கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் தொடங்கிவிட்டதால், அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவுகிறது. இதனால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா கூறுகையில், பாரம்பரிய விளையாட்டு போட்டியான கம்பலாவுக்கு, அரசின் ஆதரவு இருக்கிறது. பீட்டா அமைப்பு நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கி இருப்பதால், அதனை நடத்த முடியாத சூழல்ஏற்பட்டுள்ளது.
மக்களின் விருப்பம் ஒத்த கருத்தில் இருந்தால், அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.