
ஆண் குழந்தை பிறக்காத ஏக்கதிலும், கணவரின் குடும்பத்தார் கொடுத்த டார்ச்சர் காரணமாகவும் மூன்று மகள்களுடன் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், சிக்கபல்லபுரா மாவட்டம், அனுமந்தபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் நாகஸ்ரீ (25). இவருக்கு நவ்யாஸ்ரீ (5), திவ்யாஸ்ரீ (3), மற்றும் இரண்டரை மாத பெண் குழந்தை என மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.
முதல் பெண் குழந்தை பிறந்தது முதலே, கணவர் வீட்டார் ஆண் குழந்தை வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், நாகஸ்ரீக்கு தொடர்ந்து 3 குழந்தைகளும் பெண்களாகவே பிறந்துள்ளது.
இதனால், நாகஸ்ரீயை கணவரின் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். தனக்கு ஆண் குழந்தை பிறக்காத ஏக்கத்தில் இருந்த நாகஸ்ரீக்கு, கணவரின் வீட்டார் அளிக்கும் கொடுமையைத் தாங்க முடியாமல் இருந்து வந்துள்ளார்.
கணவரின் வீட்டாரின் கொடுமை எல்லை மீறிய நிலையில், தனது குழந்தைகளை கிணற்றில் தூக்கி வீசியும், தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாகஸ்ரீ, நேற்று காலை, அதே பகுதியில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்ற அவர், தனது மூன்று குழந்தைகளையும் தூக்கி கிணற்றில்
வீசியுள்ளார். அதனைத் தொடரந்து, நாகஸ்ரீயும், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தைகளுடன், நாகஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார், நாகஸ்ரீ மற்றும் மூன்று குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகஸ்ரீயின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நாகஸ்ரீயின் கணவர் மற்றும் வீட்டார் முதலில் இருந்தே ஆண் குழந்தை வேண்டும் என்று கொடுமைப்படுத்தி வந்துள்ளது தெரியவந்தது. ஆண் குழந்தை பிறக்காத ஏக்கத்தில் இருந்த நாகஸ்ரீக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறக்கவும் விரக்தியில் இருந்த நிலையில், கணவரின் குடும்பத்தாரின் டார்ச்சர் தாங்காமல் மூன்று குழந்தைகளுடன் நாகஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.