
பேய் ஆணையிட்டதாகக் கூறி மகளின் காதை தந்தை ஒருவர் வெட்டிய விநோத சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
டெல்லி புறநகரில் வசித்து வந்தவர் அம்ரித் பகதூர். துப்புறவுத் தொழிலாளியான இவரது இரண்டாவது மகள் அண்மையில் உயிரிழந்தார். இந்தச் சோகத்தால் குடிப்பழக்கத்திற்கு ஆளான பகதூர் மனநிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த பகதூர் உறங்கிக் கொண்டிருந்த தனது மூத்த மகளின் காதை கத்தியால் வெட்டினார். காது அறுபட்டதால் ரத்தம் பீறிட்ட நிலையில், சிறுமி அலறித் துடிக்க, சுற்றத்தார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனைத் தொடர்ந்து மகளின் காதை வெட்டிய பகதூரை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரையே மிரளச் செய்தது. “இரண்டாவது மகள் இறந்ததால் சோகத்துடனே இருந்து வந்ததேன். இழப்பை மறக்க குடிக்கத் தொடங்கினேன்”
"ஒருநாள் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் போது அமானுஷ்யமான குரல் என்னி்டம் பேசத் தொடங்கியது.
இரண்டாவது மகளை நான் தான் எடுத்துக் கொண்டேன். முதல் மகளையும் எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்று அந்த சப்தம் என் காதில் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தது.
"மூத்த மகளையும் பறிகொடுக்கக் கூடாது என்ற வேட்கையில் உனக்கு என்ன வேண்டும் என்று அந்தப் பேயிடம் கேட்டேன். அதற்கு அந்தக் குரல், உன் மகளின் காது எனக்கு வேண்டும் என்று கூறியது.
வேறு வழியின்றியே எனது மூத்த குழந்தையின் காதை மனதில்லாமல் வெட்டினேன். இருக்கிற குழந்தையும் காப்பாற்றவே இச்செயலை செய்தேன். இது தவறா..! என்று வெள்ளந்தியாக தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் பகதூர்.
காது அறுபட்டதால் பாதிக்கப்பட்ட அச்சிறுமிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பகதூர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் பகதூரை மனநிலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.