டோல் கேட்ல என்னா ஒரு கியூ ! உடனே , 'பாஸ்டேக்' வாங்கீருங்க !! வரிசையில் நின்று அவதிப்படாதீங்க !!

By Selvanayagam PFirst Published Jan 17, 2020, 10:07 AM IST
Highlights

பொங்கல் பண்டிகை பயணத்தின் போது, 'பாஸ்டேக்' ஸ்டிக்கர் ஒட்டாமல் சென்ற வாகன ஓட்டிகள், நெரிசலில் சிக்கி  கடும் அவதிப்பட்டனர். சென்னை உட்பட, மாநிலம் முழுதும் உள்ள சுங்கச் சாவடிகளில், கிலோ மீட்டர் கணக்கில் வரிசை நீண்டபோது தான்  பாஸ்டேக்' ஏன் வாங்கவில்லை  என பொது மக்கள் கவலைப்படத் தொடங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும்  46 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்கு, வாகனங்கள் காத்திருப்பதால், கால தாமதம் ஏற்படுகிறது. சரக்கு வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. 

எரிபொருள் அதிகளவில் வீணாகிறது. பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காலங்களில், சுங்கச் சாவடிகளை கடக்க, பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு, வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் பயணியர் தள்ளப்படுகின்றனர். 

இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், 'பாஸ்டேக்' நடைமுறை, 2019 டிசம்பர், 1ல் நடைமுறைக்கு வரும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.

ஆனால், இதற்கான, 'எலக்ட்ரானிக் சென்சார்' கருவிகளை, சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் கொள்முதல் செய்யாமல் இருந்தன. இவற்றை கையாள்வதற்கு, ஊழியர்களுக்கு போதிய பயிற்சி வழங்கப்படவில்லை. இதனால், டிசம்பர்  15ம் தேதி வரை, அவகாசம் நீட்டிக்கப்பட்டது. 

இதையடுத்து, வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக, சரக்கு வாகன உரிமையாளர்கள் மட்டும் போட்டி போட்டு, 'பாஸ்டேக்' அட்டைகளை வாங்கினர்.

சொந்த கார் வைத்துள்ளவர்கள் மட்டுமின்றி, பஸ், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களை வைத்துள்ளவர்கள், அவற்றை வாங்க ஆர்வம் காட்டவில்லை.எனவே, தமிழகத்தில் இதுவரை, 50 சதவீத வாகன உரிமையாளர்கள் மட்டுமே, 'பாஸ்டேக்' வாங்கி உள்ளனர்.

வேறு வழியின்றி, 'பாஸ்டேக்' இல்லாத வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, சுங்கச் சாவடிகளில் தனி வழி ஏற்படுத்தப்பட்டது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள், ஜனவரி., 15ம் தேதிக்கு பின் அனுமதிக்கப்படாது எனவும், எச்சரிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் துவங்கியது. இதை ஒட்டி, கடந்த  13ம் தேதி, ஏராளமான வாகனங்கள் சுங்க சாவடிகளை கடந்து சென்றன. சென்னையில் அலுவல் மற்றும் தொழில் காரணமாக வசிப்பவர்கள், தங்கள் சொந்த கார்களில் மட்டுமின்றி, தனியார் பஸ்கள், வாடகை வானங்களிலும், சொந்த ஊர்களுக்கு சென்றனர். 

'பாஸ்டேக்' ஒட்டிய வாகனங்கள், எந்தவித பிரச்னையும் இல்லாமல், சுங்கச் சாவடி களை நொடிப் பொழுதில் கடந்து சென்றன.

மற்ற வாகனங்கள், பணம் செலுத்தும் வழிகளில் அணிவகுத்து நின்றன. இதனால், வழக்கம் போல, குறித்த நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் பலரும் அவதிப்பட்டனர். இதையடுத்து தற்போது சாகன ஓட்டிகள் 'பாஸ்டேக்' ஸ்டிக்கர்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

click me!