அன்னபாக்யா திட்டம்: பொதுமக்களுக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் - என்ன காரணம்?

By Manikanda Prabu  |  First Published Jul 10, 2023, 12:18 PM IST

அன்னபாக்யா திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு உடனடியாக பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது


கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, “அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம், அன்னபாக்யா திட்டத்தில் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி,  பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவ‌ர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.” ஆகிய ஐந்து முக்கியமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது.

இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ் கட்சி இந்த திட்டங்களில் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், அன்னபாக்யா திட்டத்தின் கீழ் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததை மாற்றி ரொக்கமாக கொடுக்க சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் முடிவு செய்தது. அரிசி தட்டுப்பாடு காரணமாக, கிலோ ஒன்றுக்கு 34 ரூபாயை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடிவு செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 22 லட்சம் குடும்பங்களுக்கு அன்னபாக்யா திட்டத்தின் கீழ் உடனடியாக பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லாததே இதற்கு காரணம் என அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலி பேரில் மட்டும் ரூ.900 கோடி உயில்: மறைந்த முன்னாள் பிரதமர் தரமான சம்பவம்!

அன்ன பாக்யா திட்டத்தின் கீழ், நேரடி பயன் பரிமாற்றத்தை இன்று மாலை சித்தராமையா தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட மொத்த 1.28 கோடி ரேஷன் கார்டுகளில், 99 சதவீதம் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன, அவற்றில் 1.06 கோடி, அதாவது 82 சதவீதம் செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அன்ன பாக்யா திட்டத்தின் கீழ், இவர்களுக்கு பனப்பலன்கள் உடனடியாக மாற்றப்படும். மீதமுள்ளவர்களுக்கு புதிய வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்க, அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அவர்கள் வங்கிக் கணக்குகள் ஆரம்பித்ததும் அவர்களுக்கான பனப்பலன்கள் கிடைக்கும் என அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 1.27 கோடி ரேஷன் கார்டுகளில் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினர் அந்த குடும்பத்தின் தலைவராக இருக்கிறார். அதில் 94 சதவீதம் பேர் பெண்கள்; 5 சதவீதம் பேர் ஆண்கள். இந்த குடும்பத் தலைவர்களின் வங்கிக் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும். 15 நாட்களில் பயனாளிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் எனவும், இத்திட்டம் 4.41 கோடி பயனாளிகளை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!