
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), இந்தியாவையும் பூட்டானையும் இணைக்கும் 'இந்தியா-பூடான் மிஸ்டிக் மலை சுற்றுப்பயணம்' என்ற சிறப்பு ரயில் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த 13 இரவுகள் மற்றும் 14 பகல் பயணம் ஜூன் 28, 2025 முதல் டெல்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும். இந்த பயணத்துக்கான நவீன டீலக்ஸ் குளிரூட்டப்பட்ட ரயிலில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு பெட்டிகள் இருக்கும்.
இந்தியா-பூடான் சுற்றுலா
இதில் 150 சுற்றுலாப் பயணிகள் பயணிக்க முடியும். காசியாபாத், அலிகார், துண்ட்லா சந்திப்பு, கான்பூர், லக்னோ மற்றும் வாரணாசி நிலையங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரயிலில் ஏறலாம். இந்தியாவில் கவுகாத்தி, ஷில்லாங், சிரபுஞ்சி மற்றும் பூட்டானில் உள்ள திம்பு, புனாகா மற்றும் பாரோ ஆகிய பகுதிகளை இந்தப் பயணம் மேற்கொள்ளும்.
எந்தெந்த இடங்களை பார்க்கலாம்?
முதல் நிறுத்தம் குவஹாத்தி ஆகும், அங்கு சுற்றுலாப் பயணிகள் காமாக்யா கோயிலுக்குச் செல்வார்கள். இதற்குப் பிறகு ஷில்லாங்கில் உள்ள உமியம் ஏரியில் சூரிய அஸ்தமனத்தை காணலாம். அடுத்த நாள் சிரபுஞ்சியில் உள்ள ஏழு சகோதரிகள் நீர்வீழ்ச்சி, நோஹ்காலிகாய் மற்றும் யானை நீர்வீழ்ச்சிகள் மற்றும் மௌஸ்மாய் குகைகள் போன்ற கண்கவர் நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிடலாம். ஷில்லாங்கில் இன்னொரு நாள் உள்ளூர் காட்சிகளைப் பார்த்துவிட்டு, பின்னர் பிரம்மபுத்ரா நதியில் சூரிய அஸ்தமனத்தை அனுபவிக்கலாம். பின்னர் ரயில் பூட்டான் எல்லைக்கு அருகில் உள்ள ஹசிமாரா நிலையத்திற்குச் செல்லும்.
பூடானில் எந்தெந்த இடங்கள் கண்டு ரசிக்கலாம்?
பின்னர் ஹசிமாராவிலிருந்து, சுற்றுலாப் பயணிகள் புவென்ட்ஷோலிங் எல்லை வழியாக பேருந்துகள் மூலம் பூடானுக்குள் நுழைவார்கள். முதல் நாளில் திம்புவில் உள்ள உள்ளூர் சந்தை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஒரு சுற்றுப்பயணம் இருக்கும். அடுத்த நாள் திம்புவில் மோதிதாங் மிருகக்காட்சிசாலை, ஓவியப் பள்ளி, தேசிய நூலகம், கைவினைப் பொருட்கள் சந்தை மற்றும் தாஷி சோ தோங் (திம்பு தோங்) ஆகியவற்றை பார்வையிடலாம். இதற்குப் பிறகு புனாக்காவுக்குச் சென்று அங்கு செல்லும் வழியில் டோச்சு லா பாஸ் மற்றும் போ சூ மற்றும் மோ சூ நதிகளின் கரையில் உள்ள புனாக்கா தோங்கைப் பார்வையிடலாம்.
கலாசார நிகழ்ச்சிகளுடன் உணவு
பின்னர் பாரோவில் லம்பேரி ராயல் தாவரவியல் பூங்கா, தாம்சோக் லக்காங் இரும்புப் பாலம் மற்றும் பாரோ தோங் ஆகியவற்றைப் பார்வையிடலாம். அடுத்த நாள் புலி கூடு (தக்த்சாங் லக்காங்) மற்றும் தேசிய அருங்காட்சியகத்தை கண்டு ரசிக்கலாம். சுற்றுலாப் பயணிகள் வில்வித்தை மற்றும் மருத்துவ நீருடன் சூடான கல் குளியல் அனுபவிப்பார்கள். மாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் இரவு உணவும் இருக்கும்.
ஒரு நபருக்கு கட்டணம் எவ்வளவு?
பயணத்தின் முடிவில், சுற்றுலாப் பயணிகள் பூடானில் இருந்து ஹசிமாரா வந்த் அங்கிருந்து ரயிலில் ஏறி டெல்லிக்குத் திரும்புவார்கள். இந்தப் சுற்றுலாவின் பயணக் கட்டணம் ஒரு நபருக்கு முதல் வகுப்பு (கூபே) ரூ.1,58,850, முதல் வகுப்பு (கேபின்) ரூ.1,44,892, இரண்டாம் வகுப்பு ரூ.1,29,495 மற்றும் மூன்றாம் வகுப்பு ரூ.1,18,965 ஆகும்.
பயண கட்டணத்தில் என்னென்ன அடங்கும்?
இதில் ரயில் பயணம், 3 நட்சத்திர ஹோட்டல் தங்குமிடம், சைவ உணவு, பேருந்தில் சுற்றிப் பார்ப்பது, பயணக் காப்பீடு மற்றும் சுற்றுலா வழிகாட்டி ஆகியவை அடங்கும். இந்தப் பயணத்தைப் பாதுகாப்பாகவும் மறக்கமுடியாததாகவும் மாற்ற IRCTC அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். இந்தியா மற்றும் பூடானின் கலாசாரம் மற்றும் இயற்கை அழகை உன்னிப்பாகக் கவனிக்க இந்தப் பயணம் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.