Explainer: குஜராத் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் புதிய யுக்தி; 2024 தேர்தலுக்கு கை கொடுக்குமா?

By Dhanalakshmi G  |  First Published Nov 24, 2022, 1:39 PM IST

குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை தீவிரமாக நடந்து வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மூத்த பாஜக தலைவர்கள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருந்து பெரிய தலைவர்களின் பரப்புரை ஈடுபாடு குறைந்தே காணப்படுகிறது. மறுபுறம் இரண்டாம் இடத்தைப் பிடிக்க ஆம் ஆத்மி கட்சி கடுமையாக போராடி வருகிறது.


ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் எப்படியாவது இந்த முறை ஆம் ஆத்மி கட்சியை பதிவு செய்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார். ஆனால், பிரதமர் மோடியோ இவரை கண்டுகொள்ளாமல், மாநிலத்தில் பாஜக என்ன சாதனைகள் செய்து இருக்கிறது என்பது குறித்து பேசி வருகிறார். மேலும், காங்கிரஸ் கட்சியை சாதரணமாக எடை போட்டு விட வேண்டாம் என்று பாஜக தலைவர்களுக்கு கட்டளையும் பிறப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.

குஜராத் வளர்ச்சி:
குஜராத் மாநிலத்தில் மூன்று முறை முதல்வராக இருந்து பின்னர் பிரதமராக மத்திய ஆட்சிக்கு சென்றார் மோடி. அதனால், குஜராத் மாநிலத்தைப் பற்றி அவருக்கு குறிப்புகள் தேவையில்லை. தேர்தல் பரப்புரையில் சரளமாக மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசி வருகிறார். பரப்புரையில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையும், வாரிசு அரசியல் குறித்தும் பேசி வருகிறார். இவர் மீது காங்கிரஸ் தலைவர்களின் தேநீர் விற்றவர், மோசமான மனிதர் போன்ற விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வருகிறார்.

Tap to resize

Latest Videos

உங்கள் சேவகன்:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடந்த 2017 தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியை, 'மரணத்தின் வியாபாரி' என்றும், காங்கிரஸ் முன்னாள் எம்பி மணிசங்கர் ஐயர் மோடியை கீழ் சாதிக்காரர் என்றும், தேநீர் வியாபாரி என்றும் விமர்சித்து இருந்தனர். சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்த காங்கிரஸ் தலைவர் மதுசூதனன் மிஸ்திரி பேசுகையில், ''மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நரேந்திர மோடி விளையாட்டு ஸ்டேடியத்தை சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியம் என்று மாற்றுவோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இவற்றையெல்லாம் தற்போது தனது பரப்புரையில் மேற்கோள் காட்டி பேசும் பிரதமர், நான் இங்கு உங்களது சேவகனாக, உங்களது ஊழியனாக வந்துள்ளேன். ஆனால், இங்கு வந்து சென்றவர் (ராகுல் காந்தியை குறிப்பிட்டு) அரச குடும்பத்தில் இருந்து வந்து சென்றுள்ளார் என்று குறிப்பிட்டு பேசினார்.

குஜராத் கலவரத்தை 2017 தேர்தலில் எதிர்கட்சிகள் அதிகமாக விமர்சித்தன. அப்போதுதான் மோடியை மரணத்தின் வியாபாரி என்று சோனியா காந்தி விமர்சித்து இருந்தார். ஆனால், அவற்றை மீறிதான் பெரிய அளவில் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றது. 

சமீபத்தில் நவ்சாரில் நடந்த பரப்புரையில் பேசிய மோடி, டெல்லியில் இருந்து உங்களை முட்டாள் ஆக்குவதற்காக வருவார்கள், அவர்களுக்கு நீங்கள் இடம் கொடுக்க வேண்டாம் என்று அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயரை குறிப்பிடாமல் பேசினார். 

மோடியின் வெற்றி ரகசியம்:
குஜராத் மாநிலத்தில் மோடியின் தொடர்ச்சியான வெற்றிக்கு பல காரணங்களைக் கூறலாம். முதலில் பேச்சில் வல்லவர். அவரது தனிப்பட்ட பாணியிலான ஆக்ரோஷமான பிரச்சாரம், குஜராத்தை இந்தியாவுடன் இணைந்தே வளர்த்து இருப்பது, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக மாற்றியது, சங்பரிவாரின் பல அடுக்கு பரப்புரைகள் மற்றும் ஒருங்கிணைப்பு, கட்சிக்குள் பிரம்மாண்டமான் தேர்தல் குழுவை உருவாக்கி இருப்பது ஆகியவற்றை கூறலாம். மேலும், இன்றும் குஜராத் இவரது புகழைத்தான் பார்க்கிறது. 

இவருக்குப் பின்னர் ஆனந்திபென் பட்டேல், விஜய் ரூபானி முதல்வர்களாக இருந்தாலும், அவர்களுக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு இல்லை. பிரமராக இருந்தாலும், குஜராத் மக்கள் எளிதில் இவரை அணுக முடிகிறது. வேலை வாய்ப்பு, தோழி வளர்ச்சிக்கு பிரதமர் மோடியைத்தான் மாநிலம் நம்பி இருக்கிறது. எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும், மோர்பி பாலத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு போன்ற மாநிலத்தின் தோல்விகளை சரி செய்ய பிரதமர் மோடியின் பேச்சால் மட்டுமே முடியும் என்ற சூழல் உள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் நடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜக 100க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. 99 இடங்களை பாஜகவும், காங்கிரஸ் 77 இடங்களையும் பிடித்து இருந்தன.

நாடாளுமன்ற தேர்தல்:
இந்த தேர்தலைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெறுவதற்கு குஜராத் தேர்தல் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. குஜராத்தில் எப்படியாவது இந்த முறை மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை பிடிக்க வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. 

குஜராத் தேர்தல் எப்போது?
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதுவரை இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் இடையேதான் போட்டி நிலவி வந்தது. இந்த முறை ஆம் ஆத்மியும் மூன்றாவது போட்டியாளராக களத்தில் இறங்கியுள்ளது. தெற்கு குஜராத்தான் மூன்று கட்சிகளின் கவனமாக இருக்கிறது. இங்கு அரவிந்த் கெஜ்ரிவால் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.


ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை:
இலவச மின்சாரம் மற்றும் தண்ணீரை தவிர, அரவிந்த் கெஜ்ரிவால் மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும் தேர்வுத் தாள் கசிவு பிரச்சினையை வலுவாக பேசி வருகிறார். இது இளம் வாக்காளர்களை கவர்ந்து இருக்கிறது என்றே கூறப்படுகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு பதவிகளுக்கான தேர்வுகள் நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்வோம் என்றும், தாள்கள் கசிந்தால் குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் கெஜ்ரிவால் பலமுறை கூறி வருகிறார். பொறுத்திருந்து பார்ப்போம் வெற்றி யாருக்கு என்று.

click me!