ஜார்கண்ட்டில் மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்? அவசரமாக பதவியேற்பதற்கு என்ன காரணம்?

By Asianet Tamil  |  First Published Jul 4, 2024, 12:55 PM IST

சட்டவிரோத நில அபகரிப்பு வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு. தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.


ஜார்கண்ட் மாநிலம் கடந்த சில மாதங்களாகவே தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இதற்குக் காரணம் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் சட்டவிரோத நில அபகரிப்பு குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டதுதான். தற்போது இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மீண்டும் மாநிலத்தின் முதல்வராகிறார். இந்த மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இவர் மீண்டும் முதல்வராவது ஏன் முக்கியம் என்று பார்க்கலாம். 

இவர் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல்பாடுகளை கவனிப்பது என்றும் சம்பை சோரன் முதல்வராக நீடிப்பது என்றும் ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது முதல்வராக பதவியேற்க மீண்டும் ஹேமந்த் சோரன் முடிவு செய்து இருப்பது இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

நில மோசடி உள்ளிட்ட பல வழக்குகள்.. தொடர்ந்து அனுப்பப்பட்ட சம்மன் - முன்னாள் முதல்வரை சிறையில் அடைக்க உத்தரவு!

மீண்டும் முதல்வராவது தொடர்பாக ஆலோசிப்பதற்காக புதன் கிழமை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி ஆகிய கட்சிகள் ராஞ்சியில் கூடி இருந்தன. இந்தக் கூட்டத்தில் தான் மீண்டும் முதல்வராக ஹேமந்த் பதவியேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சம்பை சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்பதற்கு ஆளுநரைப் பார்த்து மனு கொடுத்துள்ளார். முதல்வர் பதவியில் இருந்து சம்பை சோரன் ராஜினாமா செய்து இருப்பதில் அவருக்கு சம்மதம் இல்லை என்றும் இதனால் அவர் இதுவரை தனது பதவி ராஜினாமா குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஆட்சிக் காலம் இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், ஏன் சம்பை சோரனை முதல்வராக நீடிக்க அனுமதிக்கவில்லை? சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் முதல்வராக பதவியேற்க என்ன அவசியம் ஹேமந்த் சோரனுக்கு ஏற்பட்டது போன்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. 

சிறையில் இருந்து வெளியே வந்த ஐந்து நாட்களில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் ஹேமந்த் சோரன் கொண்டு வந்துள்ளார். இதற்குக் காரணம் கட்சிக்குள் ஏற்பட்டு இருக்கும் பிளவு என்று கூறப்படுகிறது.  தேர்தலை எதிர்கொண்டு இருக்கும் நிலையில் இதுபோன்ற பிளவுகள் கட்சிக்குள் ஏற்படுவதை ஹேமந்த் விரும்பவில்லை. 

உண்மையை கேட்க தைரியம் இல்லாதவர்கள்.. வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த பிரதமர்..

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு உத்வேகம் கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஹேமந்த் சோரனால் மட்டுமே சட்டசபை தேர்தலில் எதிர்கொள்ள முடியும் என்று கட்சி கருதுகிறது. கட்சிக்குள் ஒற்றுமையை கொண்டு வரவும், கட்டுக்குள் வைத்திருக்கவும், தேர்தலுக்கு முந்தைய தவறுகளை களைவதற்கும் முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவி ஏற்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

சிறையில் ஹேமந்த் இருந்தபோது மக்களவை தேர்தல் நடந்தது. இதனால், பிரச்சாரத்தில் ஹேமந்தால்  ஈடுபட முடியவில்லை. இந்தியா கூட்டணியிலும் முக்கிய நபராக ஹேமந்த் சோரன் இருந்தார். எதிர்கொண்டு இருக்கும் சட்டசபை தேர்தலில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு அனுதாப வாக்குகள் கிடைக்கும் என்று கட்சி கருதுகிறது. இதன் காரணமாகவே மீண்டும் முதல்வராக ஹேமந்த் சோரனை தேர்வு செய்ய கூட்டணி கட்சிகளும் முடிவு செய்துள்ளன. 

தற்போது வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில். மீண்டும் எந்த நேரத்திலும் சிறைக்குள் செல்லலாம் என்பதை ஹேமந்த் அறியலாமல் இல்லை. அந்த தருணத்தில் தனது மனைவி கல்பனாவை முதல்வராக தேர்வு செய்வதற்கான அதிகாரமும் ஹேமந்திற்கு உள்ளது. சிறையில் ஹேமந்த் இருக்கும்போது தன்னை கட்சியின் முக்கியத் தலைவராக கல்பனா நிரூபித்துக் கொண்டார்.  கணவரின் சார்பில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஹேமந்த் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்றாலும், அனுதாப அலையால் கட்சிக்கு வெற்றி கிடைத்தது.

கூட்டணி கட்சிகளும் ஹேமந்த் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளது. 81 உறுப்பினர்கள் பலம் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியின் பலம் 45 ஆக இருக்கிறது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு 27, காங்கிரஸ் கட்சிக்கு 17, ஆர்ஜேடி கட்சிக்கு 1 எம்எல்ஏவும் உள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. அதுவே, சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வெறும் 9 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த முறை தேர்தலின்போது ஹேமந்த் சோரன் சிறையில் இருந்த காரணத்தால், அனுதாப வாக்குகள் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு கிடைத்து இருப்பது ஊர்ஜிதமாகி இருக்கிறது. 2024 தேர்தலில் காங்கிரஸ் மூன்று இடங்களிலும், ஜேஎம்எம் மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இது காங்கிரஸ் கூட்டணிக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. சட்டசபை தேர்தலிலும் இந்த வாய்ப்பை நழுவ விடுவதற்கு காங்கிரஸ் கூட்டணி தயாராக இல்லை. இந்த நிலையில் தான் விரைவில் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க இருக்கிறார்.  

click me!