Explained:கர்நாடகாவில் சூடு பிடித்து இருக்கும் நந்தினி vs அமுல்; என்ன காரணம்?

By Dhanalakshmi G  |  First Published Apr 12, 2023, 4:53 PM IST

கர்நாடகாவில் தேர்தல் சூடுபிடித்து இருக்கிறதோ இல்லையோ அமுல் மற்றும் நந்தினி இடையேயான கார்பரேட் போர் தினமும் மக்களை திசை திருப்பி வருகிறது. 


குஜராத் மாநிலத்தை இருப்பிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அமுல் கூட்டுறவு பால்  மற்றும் தயிர் கர்நாடகா மாநிலத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று என்று கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி அந்த நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு பாஜகவை எதிர்ப்பதற்கு கூடுதலாக ஒரு ஆயுதம் கிடைத்தது போல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் உணர்ந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், இந்த இரண்டு பிராண்ட்டுகளும் அற்புதமான ஆச்சரியங்களை ஏற்படுத்தும் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் இந்த அறிவிப்பும் வெளியானது. அமித் ஷாவிடம்தான் கூட்டுறவுத்துறையும் இருக்கிறது.

தேர்தல் யுக்திக்கு நந்தினி:
இதனால் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் பாஜகவுக்கு எதிராக விமர்சனங்களை வைத்தன. அதாவது. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இந்த அறிவிப்பு வருவதால், குஜராத்தின் அமுல் பிராண்ட் உடன் கர்நாடகா பால் கூட்டுறவுக்கு சொந்தமான ரூ. 21,000 கோடி மதிப்பிலான நந்தினி பிராண்ட் இணைக்கப்படும் என்று தங்களது அச்சத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இதையே தங்களது தேர்தல் யுக்தியாகவும் பயன்படுத்தினர்.  

Tap to resize

Latest Videos

ஒரே நாடு, ஒரே அமுல்:
மேலும், 49 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கேஎம்சியின் நந்தினியை அதன் மூத்த நிறுவனமான ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் (அமுல்) உடன் இணைக்க பாஜக விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அப்போதுதான் நாட்டில் "ஒரே நாடு, ஒரு அமுல்" இருக்க முடியும் என்று பாஜக இந்த முடிவை எடுத்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

மக்கள் எல்லாரும் நல்லாருக்கணும் சாமி.!! அக்னி குண்டத்தில் இறங்கிய பாஜக தலைவர் - வைரல் வீடியோ
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு:
நந்தினி பிராண்டை விற்பதற்கு பாஜக முயற்சிக்கிறது என்று கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், பொதுச்செயலாளருமான ரந்தீப் சுர்ஜிவாலா குற்றம்சாட்டினார். இந்த விஷயத்தில் இதே குற்றச்சாட்டை மாநில அரசின் மீது மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஹெச்டி குமாரசாமியும் வைத்தார். ''கர்நாடகாவில் வைத்து தனக்கு ஒரே போட்டியாளராக இருக்கும் நந்தினி பிராண்ட்டை முடித்துக் கட்டுவதற்கு என்றே அமுல் பிராண்ட் அறிமுகம் செய்கின்றனர். மத்திய அரசின் ஒரே கொள்கை ஒரே நாடு, ஒரே அமுல், ஒரே பால், ஒரே குஜராத் என்பதாகும் என்று குற்றம்சாட்டினார். 

தேசிய பிராண்ட் நந்தினி:
ஆனால் இவர்களது குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த முதல்வர் பசவராஜ் பொம்மை, ''அமுல் குறித்து எங்களுக்கு ஒரு தீர்க்கமான பார்வை இருக்கிறது. நந்தினி தேசிய பிராண்ட். கர்நாடகாவில் மட்டும் விற்பனையாவது இல்லை. மற்ற மாநிலங்களிலும் நாங்கள் நந்தினியை பிரபலப்படுத்தி இருக்கிறோம். கர்நாடகா பால் கூட்டுறவு சங்கத்தின் பல்வேறு பெரிய பால் பண்ணைகள் பாஜக ஆட்சியில்தான் விரிவாக்கம் செய்யப்பட்டன'' என்று தெரிவித்துள்ளார்.

விலையில் ஏற்றத்தாழ்வு:
ஆனால், கொழுப்பு நீக்கம் செய்யப்பட்ட ஒரு லிட்டர் நந்தினி பால் விலை ரூ. 39 ஆக இருக்கும்போது அதே தரத்தில் இருக்கும் ஒரு லிட்டர் அமுல் பாலின் விலை ரூ. 52 என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமித் ஷா:
கர்நாடகாவில் பால் மற்றும் தயிர் விற்க அமுல் அறிவித்தது ஏன்? கடந்த டிசம்பரில், மாண்டியாவில் கர்நாடகா பால் கூட்டுறவு சங்கத்தின் மெகா பால் பண்ணை திறப்பு விழாவில் அமித் ஷா, "அமுல் மற்றும் நந்தினி இடையேயான ஒத்துழைப்பால் துறையில் பல அதிசயங்களைச் செய்ய முடியும்" என்று கூறி இருந்தார். 

அப்போதே, நந்தினியை குஜராத்துடன் இணைக்கும் திட்டம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இதை கர்நாடகாவை ஆளும் பாஜக மறுத்து வந்தது. 

Karnataka election: நேருக்கு நேர் களம் காணும் காங்கிரஸ், பாஜக பிரபலங்கள்; முக்கிய முகங்களை கழற்றிவிட்ட பாஜக!!

தஹிக்கு எதிர்ப்பு:
நடப்பாண்டில் கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) உள்ளூர் பெயர்களைத் தவிர்த்து தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் "தஹி" என்று எழுத உத்தரவிட்டது. இது இந்தி மொழி திணிப்பு என்று தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, தஹி என்ற வார்த்தை வாபஸ் பெறப்பட்டது. 

கர்நாடகாவில் அமுல் பிராண்ட் விற்பனை இல்லையா?
கர்நாடகாவில் அமுல் பட்டர், நெய், தயிர், ஐஸ்  க்ரீம் ஆகியவை நீண்ட ஆண்டுகளாகவே விற்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி தெலுங்கானாவில் இருந்து டோட்லா, ஹெரிடேஜ் ஆகியவையும், தமிழ்நாட்டில் இருந்து திருமலா, ஆரோக்கியா, மில்க் மிஸ்ட் ஆகியவையும், கர்நாடகாவில் இருந்து நம்தாரி மற்றும் அக்ஷயகல்பா ஆகிய பிராண்ட்களும் விற்கப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சிகளின் பயம் என்ன? 
நந்தினி தயாரிப்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும் அமுல் பால் மற்றும் தயிர் விற்க அனுமதிக்கப்பட்டவுடன் அமுல் பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்தப்படுவார்கள். 

பாஜக அரசின் தற்காப்பு என்ன? 
நந்தினியை அமுல் நிறுவனத்துடன் இணைக்கும் திட்டம் இல்லை எனக் கூறி குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. மக்களை தவறாக வழி நடத்தவும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் காங்கிரஸும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் முயற்சிப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டினார். தற்போதைய காவி கட்சி ஆட்சியில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது என்றார்.

பால் உற்பத்தி குறைகிறதா? 
கர்நாடகா பால் கூட்டுறவு சங்கத்தின் ஒரு பகுதியான பெங்களூர் மில்க் யூனியன் லிமிடெட், ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் உற்பத்தி குறைவதாக ஒப்புக்கொண்டுள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் நிகழுவதாக தெரிவித்துள்ளது. கோடை காலங்களில் பால் உற்பத்தி நாளொன்றுக்கு 90 லட்சம் லிட்டரில் இருந்து 75 லட்சம் லிட்டராக குறையும் என்று விளக்கம் அளித்துள்ளனர். 

நந்தினி வியாபார அளவு என்ன? 
அமுலுக்கு அடுத்தபடியாக கர்நாடகா பால் கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் இரண்டாவது பெரிய கூட்டுறவு நிறுவனமான நந்தினி ரூ. 21,000 கோடி அளவிற்கு சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. அமுல் தினமும் 1.8 கோடி லிட்டர் பாலை உற்பத்தி செய்வதாகவும், கர்நாடகா பால் கூட்டுறவு சங்கம்  ஒரு நாளைக்கு 90 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்கிறது என்று பெங்களூர் மில்க் யூனியன் லிமிடெட் இயக்குநர் பி நாகராஜு இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்திருக்கும் பேட்டியில் தெரிவித்துள்ளார். 

உணர்வில் கலந்தது:
கர்நாடகா மாநிலத்தில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு நந்தினி முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கன்னட மக்களுடன் உணர்வு ரீதியில் இந்த பிராண்ட் கலந்து இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. எனவே, தேர்தலுக்கு முன்பே இந்த விஷயத்தில் பாஜக அரசு ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

கர்நாடகா மாநிலத்தில் பால் கூட்டுறவு சங்கத்தை மட்டும் நம்பி 25 லட்சம் விவசாயிகள் இருப்பதாகவும், அவர்களுக்கு வாழ்வாதாரமாக நந்தினி இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றன. மேலும், #SaveNandiniCampaign-ம் நடத்தப்பட்டது. 

click me!