எதிரி நாடுகளே மதிக்கும்போது... மாநில அரசுகள் ஆளுநர்களை ஏன் மதிக்கவில்லை? பிரதமர் மோடி கேள்வி

By SG BalanFirst Published Apr 21, 2024, 9:00 AM IST
Highlights

கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் மாநில அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்ற விமர்சனத்துக்கும் மோடி பதில் சொல்லியிருக்கிறார். 

ஏசியாநெட் சுவர்ணா நியூஸ், ஏசியாநெட் நியூஸ், கன்னட பிரபா மற்றும் ஏசியாநெட் நியூஸ்.காம் ஆகியவற்றுக்கு பிரதமர் மோடி சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். இந்தப் பேட்டியில் தென் மாநிலங்களின் முக்கியப் பிரச்சினைகள் பற்றி பேசி இருக்கிறார். தென்மாநிலங்களில் பாஜகவின் வளர்ச்சி வளர்ச்சி எப்படி உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநர்களின் நடவடிக்கைகள் மாநில அரசின் செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்ற விமர்சனத்துக்கும் மோடி பதில் சொல்லியிருக்கிறார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடுகள் நிலவுவது பேசுபொருளாக உள்ளது பற்றி பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் சொன்ன மோடி, “இதை நான் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருப்பவர்களிடம் கேட்க விரும்புகிறேன். எல்லா நாடுகளும் பாதுகாப்பு போன்ற தங்கள் தேவைகளை தாங்களே கவனித்துக்கொள்கின்றன. விரோதியாக இருக்கும் நாடுகளிலும் நம் நாட்டு தூதருக்கும் அணியினருக்கும் பாதுகாப்பும் மரியாதையும் கிடைக்கிறது.

PM Modi: ஆளுநர் மாளிகை குண்டுவீச்சு முதல் இலவசம் வரை ஏசியாநெட்டுக்கு பிரதமர் மோடி அளித்த சிறப்பு பேட்டி

இது என் நாடு, என் மாநிலம். ஆளுநர் பதவி அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்டது. அவருடைய மாண்பும் கண்ணியமும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்வது மாநில அரசுகளின் பொறுப்புதானே? கேரள ஆளுநர் விமான நிலையத்திற்குச் செல்லும்போது இடதுசாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி சலசலப்பை உருவாக்குகிறார்கள். இது ஒரு மாநில அரசுக்குப் பொருத்தமான செயலா?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், “செய்தித்தாளில் வெளியான கட்டுரை ஒன்றை வாசித்தேன். நமது ஆளுநர்கள் மிகவும் பொறுமையாகவே இருக்கிறார்கள். கேரளாவில் ஆரிப் சாஹேப்பின் உணவைக்கூட நிறுத்தினார்கள். மகாராஷ்டிராவில் ஒருமுறை கவர்னர் பயணம் செய்ய ஹெலிகாப்டர் வழங்கப்படவில்லை. அதனால், அவர் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் ராஜ்பவனுக்கு வெளியே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இவையெல்லாம் மாநில அரசுக்கு பொருத்தமான செயல்களா? அரசியல் சாசன பதவிகளின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் மாநில அரசுகள் செயல்பட வேண்டும்” என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

“நானும் மாநில அரசில் பணியாற்றி இருக்கிறேன். எந்த காங்கிரஸ் கவர்னருடனும் எனக்குப் பிரச்சனை இருந்ததில்லை. நான் அவர்களிடம் மரியாதையுடன் நடந்துகொண்டேன். அவர்களும் என்னை மதிப்புடன் நடத்தினார்கள். இது பல வருடங்கள் நீடிக்கும் வழக்கம்” என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பது பற்றி தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட மோடி, “2011ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணி 6 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக 15 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் இது மட்டும் அளவுகோலாக இருக்க முடியாது. மக்களுக்கு எவ்வளவு சேவை செய்கிறோமோ, அந்த அளவுக்குத்தான் வளர்ச்சி இருக்கும். அந்த மக்கள் சேவையை முழுமூச்சாகத் தொடர்ந்து செய்வோம்” என்று கூறினார்.

கையில் மையுடன் வந்தால் தள்ளுபடி! பிரியாணி கடையில் அலைமோதிய வாக்காளர்கள் கூட்டம்!

click me!