
பி.எப். கணக்கு வைத்து இருப்பவர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி ஒரு படிவம் மூலமே போதும், தனித்தனியாக படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டியதில்லை.
திருமணம், மருத்துவச் செலவு, குழந்தைகளின் கல்வி ஆகியவற்றுக்கு பணம் எடுக்க தனித்தனியாக படிவம் நிரப்பிக் கொடுக்கத் தேவையில்லை, அனைத்துக்கும் ஒரே படிவமே போதுமானது.
பி.எப். உறுப்பினர்கள் தங்களின் பணிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கணக்கில் இருந்த பணம் எடுக்க முற்பட்டால் அதற்கு சுயசான்று கையொப்பம் இடும் முறையையும் நீக்கியுள்ளது.
இது குறித்து இ.பி.எப்.ஓ. அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
பி.எப். அமைப்பில் உறுப்பினர்கள் தங்களின் முதிர்வுகாலம் முடிவதற்கு உள்ளாகவே, பல்வேறு தேவைகளுக்காக பணம் எடுக்கிறார்கள். அப்போது ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.
அதை மிகவும் எளிமையாக்கி, இப்போது அனைத்து தேவைகளுக்கும் பணம் எடுக்க ஆதார் அடிப்படையிலான ஒரு படிவம் என்ற முறையை கொண்டு வந்துள்ளோம்.
இந்த படிவத்தின் மூலம், பி.எப். உறுப்பினர்களின் சுயசான்று கையொப்பம் கூட தேவையில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பி.எப். உறுப்பினர்கள் தங்கள் வங்கிக்கணக்குடன், ஆதார் எண், தங்களின் பி.எப். பொது கணக்கு எண் ஆகியவற்றை இணைத்து இருந்தால், அவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்கு படிவம் எண் 19, 10சி, 31 ஆகியவற்றை பயன்படுத்த தேவையில்லை.
அதற்கு பதிலாக ‘ஒருங்கிணைக்கப்பட்ட கோரிக்கை படிவம்’ பூர்த்தி செய்து அளிக்கலாம், இதில் சுயசான்று இன்றி தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கோரலாம்.
அதேசமயம், ஆதார் எண்ணை, வங்கிக்கணக்குடன், பி.எப். கணக்கு எண்ணுடன் இணைக்காமல் இருக்கும் உறுப்பினர்கள், ஆதார் இல்லாத ‘ஒருங்கிணைக்கப்பட்ட கோரிக்கை படிவத்தில்’ நிரப்பிக் கொடுக்க வேண்டும்.
படிவம் எண் 19, 10சி, 31 ஆகியவற்றை பயன்படுத்த தேவையில்லை. இந்தபடிவத்தில் பி.எப். உறுப்பினர்கள் தாங்கள் பணியாற்றிய நிறுவனத்தின் கையொப்பம் ெபற்று வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.