
பி.எப். அமைப்பில் இருக்கும் சந்தாதாரர்கள் தாங்கள் வேலையில் இருக்கும் போதே, தங்கள் சேமிப்பில் 90 சதவீதத்தை எடுத்து புதிய வீடு வாங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, விரைவில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர இருக்கிறது.
இந்த திட்டத்தில் 4 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். பி.எப். அமைப்பில் இருக்கும் சந்தாதாரர்கள் தங்கள் சேமிப்பில் இருந்த எடுக்கும் பணம், வங்கிக்கடன் ஆகியவற்றை மாதத்தவணையாக செலுத்தலாம்.
மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்தியதொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1952ல் திருத்தம் கொண்டு வர இருக்கிறோம். அதில் 68பிடி என்ற இணைப்பை சேர்க்க இருக்கிறோம்.
இதன் மூலம் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் இருக்கும் 4 கோடி சந்தாதாரர்கள், தங்கள் பணிக்காலம் முடிவதற்குள் தங்களின் பி.எப். பணத்தைக் காட்டிலும் கூடுதல் தொகையை கடன் பெற்று சொந்தமாக வீடு வாங்க முடியும். இந்த தொகையை மாதத் தவனையாக செலுத்திக்கொள்ளலாம்.
இதன்படி, பி.எப். தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இந்த குழு மூலம் வங்கிகள், மற்றும் பில்டர்கள், அல்லது வீடு விற்பனையாளர்களுடன் ஒப்பந்தம் செய்து வீடு வாங்க முடியும்.
மேலும், முறைப்படுத்தப்பட்ட அமைப்பின் தொழிலாளர்கள் தங்களின் கடன்பெறும் தகுதியை பி.எப். அமைப்பிடம் உறுதி செய்ய வேண்டும். அதன்பின், அந்த உறுப்பினர் கடன் பெற தகுதியானவர், திருப்பிச்செலுத்தும் தகுதி உடையவர் என்று பி.எப். சான்று அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.