பியூன் வேலைக்கு பொறியாளர், வழக்கறிஞர், எம்.பி.ஏ. பட்டதாரிகள் விண்ணப்பம்... தட்டிச் சென்ற பாஜக., எம்எல்ஏ., மகன்

First Published Jan 7, 2018, 7:30 PM IST
Highlights
engineers mbas lawyers for office assistant job vacancy in rajasthan


ராஜஸ்தான் மாநிலத்தில் தலைமைச் செயலகத்தில் பியூன் வேலைக்கு எஞ்சினியர், வழக்கறிஞர், எம்.பி.ஏ. பட்டதாரிகள் என 12 ஆயிரத்து 453 பேர் விண்ணப்பம் செய்தனர். இறுதியில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மகன் ஒருவருக்கு கிடைத்தது. 

ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில் பியூன் வேலைக்கு சமீபத்தில் அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. குரூப்-4ம் பணிக்கான பியூன் வேலைக்கு 18 இடங்கள் காலியாக இருந்தன. இந்த பணிக்கு 12 ஆயிரத்து 453 பேர் விண்ணப்பம் செய்தனர். இதன் கல்வித்தகுதி 10ம் வகுப்பு மட்டுமே. ஆனால், விண்ணப்பம் செய்திருந்த இளைஞர்களை பார்க்கும் போது, அந்த மாநிலத்தின் வேலையின்மையின் கொடுமையின் நிலை தெரிந்தது.

393 முதுநிலைபட்டதாரிகள் 

இதில், 393 பேர் முதுநிலைபட்டதாரிகள், 129 பேர் பொறியாளர்ள், 2 பேர் எம்.பில் பட்டதாரிகள்,  ஒரு கணக்கு தணிக்கை படிப்பு முடித்தவர்,  1,553 இளநிலை பட்டதாரிகள், 23 அறிவியல் முதுநிலை பட்டதாரிகள், எம்.பி.ஏ.பட்டதாரிகள் 9 பேர் ஆகியோர் உள்ளிட்ட  12 ஆயிரத்து 453 பேர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர். 

எம்.எல்.ஏ.மகன்

இதில் 12 ஆயிரத்து 453 பேரில் 18 தகுதியான இளைஞர்கள் பியூன் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அதில், பா.ஜனதா ஜம்வா ராம்கார்க் எம்.எல்.ஏ. ஜெக்தீஸ் நாராயணன் மீனாவின் மகன் ராமகிருஷ்ண மீனாவும் ஒருவராவர். மற்ற அனைவரும் அதிகமான கல்வித் தகுதி என திருப்பி அனுப்பப்பட்டனர். 

பியூன் வேலைக்கு ஆளும் கட்சி எம்.எல்.ஏ. மகன் ஒருவர் தேர்வு செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்தது. மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணை நடத்த வேண்டும். ஆளும் கட்சி தலைவர்கள் தங்களின் உறவினர்களுக்கு வேலைகிடைக்க உதவி இருக்கிறார்கள், ஆனால், மாநிலத்தில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டது’’ என்றார். 

ஆனால், காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டை பா.ஜனதா எம்.எல்.ஏ. மீனா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், “ என்னுடைய மகன் அரசு விதிமுறைகளைப்பின்பற்றியே பியூன் பணிக்கு விண்ணப்பித்தார். நேர்முகத் தேர்வு மூலமே தேர்வு செய்யப்பட்டார். ஆனால், என் பதவியை பயன்படுத்தி வேலைபெற்றுக் கொடுத்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது. என்னுடைய பதவியை பயன்படுத்தி இருந்தால், நான் எதற்கு என் மகனுக்கு பியூன் பணியை பெற்றுக் கொடுக்க வேண்டும்?’’ எனத்தெரிவித்தார்.

click me!