அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்துவதற்காக அமலாக்கத்துறை அவருக்கு இதுவரை 5 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால், அனைத்து சம்மன்களையும் சட்டவிரோதமானது என கூறி, அரவிந்த் கெஜ்ரிவால் அதனை நிராகரித்துள்ளார்.
இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது வருகிற 7ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி டிசம்பர் 21 மற்றும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 3, 18 ஆகிய தேதிகளில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன் தொடர்ச்சியாக, கடந்த 31ஆம் தேதி மீண்டும் சம்மன் அனுப்பியது. இந்த சம்மன்கள் அனைத்தையும் சட்டவிரோதமானது என கூறி அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்துள்ளார்.
பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் மோடி தான்! கருத்துக்கணிப்பில் 64% மக்கள் விருப்பம்
டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021 நவம்பரில் புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. டெல்லி ஆம் ஆத்மி அரசின் இந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த புதிய கலால் கொள்கை பின்னர் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், இதுதொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும் முன்னாள் கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில், விசாரணை என்ற சாக்கில் தன்னை கைது செய்ய பாஜக திட்டமிடுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.