ஆசிரியர் நியமன ஊழல்: மம்தாவின் வலது கரத்தை வீடு புகுந்து தூக்கிய அமலாக்கத்துறை.. அதிர்ச்சியில் தீதி.

By Ezhilarasan Babu  |  First Published Jul 23, 2022, 12:37 PM IST

மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உதவியாளர் வீட்டில் 20 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.


மேற்கு வங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உதவியாளர் வீட்டில் 20 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியும் கைதாகியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைந்தது முதல் இருந்தே  அக்கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சராக இருந்து வரும் பார்த்தா சட்டர்ஜி மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணும் இருந்தது. அதாவது 2017 ஆம் ஆண்டு அவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ஆசிரியர்கள் மற்றும்  பள்ளிக்கல்வித்துறை சம்பந்தமான  பணி நியமனங்களில் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு பணி வழங்கியதுதான் அவர் மீதான புகார்.

Tap to resize

Latest Videos

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி வீடு, அலுவலகம் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவரின் உதவியாளர்களின் வீடு அலுவலகம் என மொத்தம் 13 இடங்களில் சோதனை நேற்று தொடங்கியது, தற்போது இந்த சோதனை 26 இடங்களுக்கு விரிவடைந்துள்ளது. தற்போது சோதனை தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறது, நேற்று அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு மிகவும் நெருங்கிய பெண் உதவியாளர் அர்பிதா முகர்ஜி என்பவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் வீட்டில் பல இடங்களில் கட்டுகட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் :மேற்கு வங்க அமைச்சரின் உதவியாளர் வீட்டில் சோதனை... ரூ.20 கோடி ரொக்கம், செல்போன்கள் பறிமுதல்!!

அங்கிருந்த பணக்குவியல்களை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டு கட்டுகள் குவியல் குவியலாக இருந்தன, ரூபாய் நோட்டுகள் மூட்டைகளாகவும், பண்டல்களாகவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதை எளிதில் எண்ண முடியாது என்பதால் உடனே வங்கி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பணம் எண்ணும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன, அதில் மொத்தம் 20 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது. அது அனைத்தும் கணக்கில் வராத பணமாகும், பணம் முழுவதும் ஆசிரியர் பணி நியமனத்திற்காக பெறப்பட்ட லஞ்சப்பணம் என தெரியவந்தது.

இதையும் படியுங்கள் :ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்த பிரதமர்..! யாரெல்லாம் பங்கேற்றார்கள் தெரியுமா?

இது குறித்த வழக்கு ஏற்கனவே சிபிஐ வசம் இருந்து வருகிறது, ஆசிரியர் நியமன ஊழலில் மொத்தம் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்து வருகிறது, இந்நிலையில்தான் அமலாக்கத் துறை அதிகாரிகளின் இந்த சோதனையில் 20 கோடி பணம் சிக்கியுள்ளது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர். ஏற்கனவே அவரது உதவியாளர் அர்பிதாமுகர்ஜி அமலாக்கத்துறையின் பிடியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமலாக்கத் துறை அதிகாரிகளின் கைது வாரண்டில் அமைச்சர் பார்த்தா குற்றத்தை ஓப்புக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார். பார்த்தா சட்டர்ஜி மம்தா பானர்ஜியின் நெருங்கிய அமைச்சர் என்பதும், அவர் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களில் மிக முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் தளபதிகளில் ஒருவரான பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டிருப்பது அக் கட்சித் தலைவர் முதல்வர் மம்தாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  
 

click me!