தேர்தல் பத்திரங்கள் வழக்கு: எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!

By Manikanda Prabu  |  First Published Mar 11, 2024, 11:50 AM IST

தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட மிக எளிமையான உத்தரவை பின்பற்ற எஸ்.பி.ஐ. வங்கி கால அவகாசம் கோருவது எந்த வகையில் ஏற்புடையது என உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது


தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்தல் பத்திரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரங்களை 2024ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tap to resize

Latest Videos

ஆனால், அந்த தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கவில்லை. இதுதொடர்பாக கடந்த முறை நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தேர்தல் பத்திரங்களின் விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் மாதம் வரை அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எஸ்.பி.ஐ. வங்கியை முற்றுகையிட்டு ஆர்பாட்டங்கள் நடத்தின.

இந்த நிலையில், தேர்தல் பத்திர விவகாரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க கால அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ. வங்கியின் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எஸ்.பி.ஐ. சார்பில் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகியுள்ளார்.

வழக்கு விசாரணையின்போது, நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. அப்படி இருக்கும் பொழுது அதன் தகவல்களை கொடுப்பதில் எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அதற்கு, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அவை ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. எனவே இவற்றை சேகரிப்பதில் சற்று பிரச்சனைகள் இருக்கிறது என எஸ்.பி.ஐ சார்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் பத்திரங்களை வெளியிடுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட மிக எளிமையான உத்தரவை பின்பற்ற எஸ்.பி.ஐ. வங்கி கால அவகாசம் கோருவது எந்த வகையில் ஏற்புடையது என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவகாரங்கள் மிக சுலபமாக சேகரிக்க கூடியது அதை வெளியிட எஸ்பிஐ வங்கி ஏன் கால அவகாசம் கேட்கிறது எனவும் கேள்வி எழுப்பியது.

தேர்தல் பத்திர விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகிறது. இந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என எஸ்பிஐ வங்கிக்கு சரமாரியக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ வங்கியால் செய்ய முடியாத வேலையை ஏதும் நாங்கள் கொடுக்கவில்லை ஏற்கனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம் அப்படி இருக்கும்பொழுது அந்த வேலையை செய்து முடிக்க தற்போது கால அவகாசம் கேட்பது ஏன் என மீண்டும் கேள்வி எழுப்பியது.

நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறையில் வேலை:நாளை தான் கடைசி தேதி!

முன்னதாக, தேர்தல் பத்திரம் திட்டத்தை கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பாஜக அறிவித்தது. இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2018ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி, ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. அவை பாரத ஸ்டேட் வங்கியில் மட்டுமே கிடைக்கும். ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களில் ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட வங்கி கிளைகளில் தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்த தேர்தல் பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனி நபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொதுமக்களுக்கோ அல்லது நன்கொடையை பெறும் அரசியல் கட்சிக்கு அளிக்கப்படாது. ஆனால், அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம். பொதுவாக ஒரு மாதத்தில் 10 நாட்களுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் வழங்கப்படும். எனினும் தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 30 நாட்கள் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

இத்தகைய தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், அதன் விவரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!