
நாடு முழுவதும் 14 மாநிலங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. சமீபத்தில் தான் மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தான், 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, மத்திய பிரதேசம் , ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலி உள்ளிட்டவைக்கு நாடாளுமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், ஆந்திர பிரதேசம், அசாம், பீகார், அரியானா உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்டமன்ற இடை தேர்தலுக்கான வேட்புமனு வரும் 1-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதியுடன் முடிவடையும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 11-ஆம் தேதியும், அதே மாதம் 30ம் தேதி 30 சட்டமன்ற தொகுதி இடை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். நவம்பர் இரண்டாம் தேதியன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.