
மேகாலயாவில் பாஜக தலைமையிலான ஆட்சியில், 12 அமைச்சர்களில் எட்டு பேர் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜினாமா செய்த அமைச்சர்களில் தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயகக் கட்சி, ஹில் ஸ்டேட் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜகவை சேர்ந்த 8 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜினாமா செய்த அமைச்சர்களில் தேசிய மக்கள் கட்சின் அம்பரீன் லிங்டோ, கோமிகன் யம்போன், ரக்கம் ஏ. சங்மா, அபு தாஹிர் மண்டல், ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் பால் லிங்டோ, கிர்மென் ஷைலா, ஹில் ஸ்டேட் மக்கள் ஜனநாயக கட்சியின் ஷக்லியார் வார்ஜ்ரி, பாஜகவை சேர்ந்த ஹெக் ஆகியோர் அடங்குவர். மேகாலயாவில் அமைச்சரவை மறுசீரமைப்புக்கு முன்பே இவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
மேகாலயாவில் தற்போது முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி அரசு அமைந்துள்ளது. இங்கு கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசு மேகாலயா ஜனநாயக கூட்டணி என்ற கூட்டணியை அடிப்படையாகக் கொண்டது. 2023 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் மொத்தம் 12 அமைச்சர்கள் இருந்தனர். அதற்கு மேல் இருக்க முடியாது. இவர்களில் 8 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்பு சில புதிய முகங்களை அமைச்சரவையில் சேர்க்க முடியும் என்பதற்காகராஜினாமா செய்துள்ளனர். புதிய அமைச்சர்கள் இன்று மாலை 5 மணிக்கு ராஜ்பவனில் பதவியேற்பார்கள். மேகாலயாவில் அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. மேகாலயா ஜனநாயக கூட்டணியில் சமநிலை ஏற்படும் வகையில் கூட்டணி கட்சிகளை திருப்திப்படுத்தவும், அனைத்து பிரிவுகளும் அதன் பிரதிநிதித்துவத்தைப் பெறவும் இந்த மாற்றம் செய்யப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வாலட்மிகி ஷில்லா, சோஸ்தெனஸ் சோஹ்துன், பிரெனிங் ஏ.சங்மா, திமோதி டி ஷிரா ஆகியோர் அமைச்சரவையில் இணைவார்கள். இது தவிர, ஐக்கிய ஜனநாயகக் கட்சி தலைவர் மெட்பா லிங்டோ, முன்னாள் அமைச்சர் லக்மென் ரிம்புய் ஆகியோரும் பதவியேற்க வாய்ப்புள்ளது. ஹில் ஸ்டேட் மக்கள் ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் மெத்தோடியஸ் த்கார் அமைச்சரவையில் ஷக்லியார் வார்ஜ்ரிக்கு பதிலாக நியமிக்கப்படுவார். அதே நேரத்தில் பாஜகவின் சன்போர் ஷுல்லாய் அமைச்சரவையில் ஹெக்கிற்கு பதிலாக நியமிக்கப்படுவார்.