
மணிப்பூரில் அதிகாலை 2.46 மணியளவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில், 3.2 ஆகப் பதிவாகி இருந்தது. அதிகாலையில் உரக்கத்தில் இருந்த பொதுமக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததை அடுத்து அலறியடித்துக் கொண்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அதிகாலையில் துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஆப்கானிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறியிருந்த நிலையில் குஜராத், மணிப்பூர், அசாம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் உள்ள நோனி நகரில் இன்று அதிகாலை 2.46 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தை தூக்கத்திலேயே உணர்ந்த பொதுமக்கள் பயத்தில் வீட்டைவிட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் விவரம் எதுவும் வெளியாகவில்லை.
அதேபோல், துருக்கியின் மலாத்யா மாகாணத்தில் மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகியுள்ளது. இதனால், ஒருவர் உயிரிழந்ததாகவும், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.