குஜராத்தில் உங்கள் அரசியலுக்கு எங்கள் பெயரை இழுக்காதீர்கள்: பாகிஸ்தான் 

First Published Dec 11, 2017, 2:45 PM IST
Highlights
dont drag our name in to your gujrat politics says pakistan


குஜராத் சட்ட மன்றத் தேர்தலில் பாகிஸ்தானின் தலையீடு இருக்கிறது என்று கூறியிருந்தார் பிரதமர் மோடி. இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. உங்களின் குஜராத் அரசியலுக்கு எங்கள் பெயரை இழுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறது. 

குஜராத் தேர்தல் விவாதங்களில் எங்கள் நாட்டின் பெயரை இழுப்பதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மொஹம்மது ஃபைசல், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவர் தனத் டிவிட்டரில், “சதித் திட்டங்கள் மூலம் வெற்றி பெறுவதை விட உங்கள் சொந்த பலத்தில் வெற்றி பெறுங்கள். தேர்தல் விவாதங்களில் பாகிஸ்தான் பெயரை இழுப்பதை இந்தியா நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் தலையீடு உள்ளதாக வெளியாகும் தகவல் அடிப்படை ஆதாரமற்றது” என்று கூறியுள்ளார். 

இதனிடையே பாகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள இந்தியா, தேர்தலில் சொந்த பலத்தில் போட்டியிடும் திறன் இந்தியர்களுக்கு உண்டு. முதலில் நீங்கள் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவதை  நிறுத்துங்கள் என்று கூறியுள்ளது.

நேற்று குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு உள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார். அவர் இது பற்றிப் பேசுகையில், அண்மையில்  மணிசங்கர் அய்யர்  தில்லியில் உள்ள தனது வீட்டில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை அழைத்து ரகசியமாக சந்தித்துப் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதை அடுத்து தான்  மணிசங்கர் அய்யர் என்னை இழிபிறவி என விமர்சித்தார்” என்று கூறியிருந்தார். அவரது குற்றச்சாட்டு நேற்று புயலைக் கிளப்பிய நிலையில், இன்று பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் கருத்துகள் இன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

முன்னதாக குஜராத் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் முடிவடைந்து, இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு தயாராகி வருவது குறிப்பிடத் தக்கது. 

click me!